த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உறவுகளை மீட்க விடாது செயற்பட்டுள்ளனர் என குற்றச்சாட்டு

Report Print Yathu in அரசியல்

இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமது உறவுகளை மீட்க விடாது செயற்பட்டுள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு இலங்கை அரசிடம் நீதி கோரி போராடிய போதும், அந்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் 2012ஆம் ஆண்டிலிருந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் நீதி கோரிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் ஐ.நா மனித உரிமைப்பேரவையால் கூட நீதி பெற்றுத்தருவது சாத்தியமற்றது என்ற நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது விவகாரத்திற்கு நீதி பெற ஐ.நா பாதுகாப்புச்சபை ஊடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இவ்வாறான நிலைப்பாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீதி வேண்டி போராடி வரும் நிலையில் அதற்கு மாறாக உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசுடன் இணைந்து வலியுறுத்தி வந்துள்ளது.

இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமது உறவுகளை மீட்க விடாது சிங்களத்தின் சிறைக்குள் தொடர்ந்தும் பூட்டி வைத்திருக்க எத்தனித்து வருகின்னர்

கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமக்கு துரோகம் இழைத்து வந்துள்ளனர். இலங்கை அரசுக்கு ஐ.நாவில் கால நீடிப்பினை பெற்றுக்கொடுத்துள்ளனர் அரசுடன் இணைந்து ஓ.எம்.பி.அலுவலகத்தை திறந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஏமாற்ற கூட்டமைப்பு துணை போயுள்ளனர்.

ஓ.எம்.பி அலுவலகத்தை தமிழர் தாயகத்தில் திறந்து மரண சான்றிதழ் வழங்க கூட்டமைப்பு உள்ளிட்ட சிலர் சிங்கள் நாடாளுமன்றில் தவமிருந்து ஓ.எம்.பி.அலுவலகம் திறப்பதற்கான சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

அவ்வாறான அலுவலகத்தில் சில காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களும் பதிவு செய்யவேண்டிய நிலைக்கு ஏமாற்றி அழைத்து செல்லப்பட்டு மரணச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சுமந்திரன் ஆகியோர் ஜெனிவா செல்வது சிங்கள அரசை பாதுகாப்பதற்காகவே மட்டும் என்பதே வெளிப்படையான உண்மையாகும்.

சர்வதேசத்தில் உள்ளக விசாரணைக்கு சந்தர்ப்பம் வழங்கி, கால அவகாசம் வழங்கி அரசுக்கு முண்டு கொடுத்து எமது உறவுகளை தேடி அலைந்து நோயாளராகி சாகடிக்கப்பட்ட 70 மேற்பட்ட தாய் தந்தையரின் சாவுக்கு காரணமாக இருந்த சிறீதரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் 16 எம்பிகளையும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்து கோட்டா அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த அனைத்து உறவுகளும் முன்வரவேண்டும்.

இன அழிப்புக்கான ஆதாரங்கள் இல்லை என சுமந்திரன் வெளிப்படையாகவே சர்வதேச களங்களில் கூறினார். ஐ.நா நிபுணர் குழுவின் ஆய்வறிக்கையை காட்டி சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது எனக் கூறினார்.

இத்தனை காலமும் அரசுடன் இணைந்து அவர்கள் செயற்பட்டுவிட்டு இன்று எமக்காக பேசுவது போன்றதான நாடகத்தினை தங்களது வாக்கு வங்கியை நிரப்புவதற்காக அரங்கேற்ற முனைகின்றனர்.

நாங்கள் ஒருபோதும் கூட்டமைப்பையோ, சிங்கள அரசையோ நம்ப தயாரில்லை எமக்கான நீதியை சர்வதேச சமூகமே பெற்றுத்தர வேண்டும்.

சர்வதேச நீதி பொறிமுறைகள் உருவாக்கப்பட்டு இலங்கை அரசு மேற்கொண்ட அத்தனை குற்றங்களிற்கும் தண்டனை வழங்கப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

உயிரோடு படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்தவர்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் படையினரால் கொடூரமாக சித்திரவதை செய்தும் உயிரோடு எரியூட்டியும் உயிரோடு அறுக்கப்பட்டும் துடிக்கத் துடிக்க கொல்லப்பட்டவர்களுக்கும் நீதி இல்லை.

பல நூற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற இனப்படுகொலைக் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை படையினருக்கு இன்றுவரை தண்டனை வழங்கப்படவில்லை.

குறிப்பாக பல நூறு இராணுவத்தினர் முன்னிலையில் மிகக் கொடூரமாக பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட எம் சகோதரிகளுக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை.

யுத்த காலத்தில் இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுக்களினாலும் வீதிகளிலும் வீடுகளிலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்தும் கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்ட எமது அப்பாக்களை அண்ணாக்களை அக்காக்களை தேடி எமது அம்மாக்களும் உறவுகளும் கடந்த 10 ஆண்டுகளாக வீதி வீதியாக அலைகின்றார்கள்.

எமது உறவுகள் காணாமல் போவதற்கு காரணமான முப்படையினரும் அவர்களுக்கு கட்டளையிட்டவர்களும் சுத்தந்திரமாக எம் முன்னிலையில் வலம்வருகின்றார்கள்.

உலகிலேயே மிகக் கொடூரமான சட்டமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை 2015ஆம் ஆண்டு சுட்டிக்காட்டியுள்ள இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டமானது இன்று வரை நீக்கப்பட்டவில்லை.

அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மிகக் கொடூரமான சித்திரவதைகள் மூலம் பெறப்பட்ட வாக்கு மூலங்களின் அடிப்படையில் விசாரணைக் கைதிகளாகவும் தண்டனைக் கைதிகளாகவும் எமது உறவுகள் 20 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கின்றார்கள்.

இன்று தமிழர் வாழ்வியலில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழர் தேசமெங்கும் முழுமையான இராணுவமயமாக்கல் ஆக்கிரமிக்கப்பட்ட பொது மக்களின் விவசாயக் காணிகளை கைவிடாமை மீன்பிடித்தடை என்பது எமது வளர்ச்சியினை தடுக்கின்றது.

அது மட்டுமன்றி பெரும் தொகையான இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வுத்துறையினர், கடற்படையினரென எமது பிரதேசங்களில் குவிக்கப்பட்டிருந்தும் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தி கஞ்சா வியாபாரம் தனியார் வீடுகளில் கொள்ளைகள், கொலைகள் மாணவர்கள் மத்தியில் கலாச்சார சீர்கேடுகளென பட்டியல் தொடர்ந்து கொண்டே போகின்றது.

இச்செயற்பாடுகள் தற்செயலானவையல்ல. நன்கு திட்டமிடப்பட்டு எமது சமூகத்தினை அழிக்கவே அனுமதிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களை தொடர்ச்சியாக உரிமைகளற்ற அடிமைகளாக வைத்திருக்கவே சிங்கள அரசு விரும்புகின்றது என தெரிவித்துள்ளனர்.