வாக்கு எண்ணும் நிலையங்களில் சீ.சீ.ரி.வி கெமராக்களை பொருத்துங்கள் - சுதந்திரக் கட்சி

Report Print Steephen Steephen in அரசியல்

வாக்கு எண்ணும் நிலையங்கள் அனைத்திலும் சீ.சீ.ரி.வி கெமராக்களை பொருத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த கோரிக்கை அடங்கிய கடிதத்தை இன்று அல்லது நாளை அனுப்பி வைக்க உள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயலாளர் பந்துலால் வெள்ளால தெரிவித்துள்ளார்.

இப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டால், வாக்கு எண்ணும் நிலையங்களில் எவ்வித சிக்கலான நிலைமைகளும் ஏற்பட வாய்ப்பிருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு செல்ல ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுச் சபையே இது குறித்து தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் 5 ஆம் திகதி நடக்கும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிடுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கான நடவடிக்கையில் இந்த கூட்டணிக்குள் இருக்கும் சிலர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால், தாம் விருப்பு வாக்குகளால் தோற்கடிக்கப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களுக்கு மத்தியில் அச்சம் நிலவுவதாகவும் பேசப்படுகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமைக்கப்பட்ட 100 நாள் அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் அந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டனர். இவர்கள் திட்டமிடப்பட்டு தோற்கடிக்கப்பட்டதாக அப்போது குற்றம் சுமத்தப்பட்டது.

தேர்தல் பிரசாரங்களின் போதும் இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் பரஸ்பரம் பகிரங்கமாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்களில் ஒருவரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அடிக்கடி கூறி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.