கடந்த அரசாங்கம் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்கியது - சீ.பி.ரத்நாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு வந்து அமைச்சு பதவிகளையும் பெற்றுக்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹட்டன் நகரில் நேற்று மாலை நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்காக நாடாளுமன்றத்திற்கு செல்லும் மக்களின் பிரதிநிதிகளே நாட்டின் அரசியல்வாதிகள் என்பவர்கள்.

இரண்டு கோடியே 20 லட்சம் மக்கள் வாழும் நாட்டில் ஒரு கோடியே 57 லட்சம் மக்கள் தமது வாக்குகளை அளிக்கின்றனர். 225 பேர் நாடாளுமன்றத்திற்கு செல்ல முடியும். 197 பேர் நேரடியாக மக்களால் தெரிவு செய்யப்படுகின்றனர்.

ஏனையோர் தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய பட்டியலில் சென்று அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்டனர்.

நாட்டில் எதிர்காலத்திற்காக மக்கள் சரியான முறையில் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரஸ் எமது நாட்டிலும் உலகம் முழுவதிலும் பரவும் என நாங்கள் எப்போதும் எதிர்பார்க்கவில்லை.

தேர்தல் நடத்த தயாரான போது கொரோனா வைரஸ் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக பாடசாலைகளை மூட நேரிட்டதுடன் தனிமைப்படுத்தல் சட்டத்தை அமுல்படுத்த நேரிட்டது. இதனை நாங்கள் தெரிவு செய்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சரியாக முகாமைத்துவம் செய்தார்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது. அந்த கட்சியின் தேசிய ஆட்சியமைப்பதே எதிர்க்கட்சியாக வருவதோ அல்ல. சிறிகொத்தவை பாதுகாக்க வேண்டும் என்பதே அந்த கட்சியினரின் நோக்கம்.

நாங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைப்போம். எதிர்க்கட்சி எது என்பதே பிரச்சினை.

மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து எப்.சீ.ஐ.டி என்ற ஒன்றை ஏற்படுத்தி அரசியல் பழிவாங்கலுக்காக சிறையில் அடைத்தது. அரசியல் பழிவாங்கலை மாத்திரமே செய்தனர். ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சியாக கூட வர முடியாது என்பது வருத்தமான விடயம். ஒருவர் தொலைபேசியை எடுத்துக்கொண்டு சென்றார். அதற்கு அழைப்பை எடுத்தால் அது துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர் எனவும் சீ.பி. ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.