ரணில் - சஜித் பிளவு ஏமாற்றும் நடிப்பு! உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என பிளவுப்பட்டுள்ளமையானது ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் ஏமாற்றும் நடிப்பு என பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுகின்றனர் என குற்றம் சுமத்தி ஐக்கிய தேசியக் கட்சி பலரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளது.

கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பட்டியலை நாங்கள் நன்றாக பரீட்சித்து பார்த்தோம். எனினும் அந்த பட்டியலில் சஜித் பிரேமதாசவின் பெயரை காணவில்லை. இது என்ன திருட்டுத்தனம். உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என பிளவுப்பட்டுள்ளதா, இல்லை என்றால், ரணில் விக்ரமசிங்கவும் சஜித் பிரேமதாசவும் பொய்யான ஏமாற்று நடிப்பில் ஈடுபடுகின்றனரா?.

இலங்கை மத்திய வங்கியின் மோசடி காரணமாக ரணில் விக்ரமசிங்க மீது அதிருப்தியடைந்த ஐக்கிய தேசியக் கட்சியினரின் வாக்குகளை சஜித் பிரேமதாச பக்கம் இழுக்கவும் சஜித் பிரேமதாசவின் விகட நாடகம் காரணமாக அதிருப்தியடைந்த கட்சியினரின் வாக்குகளை ரணில் விக்ரமசிங்க பெற்றுக்கொள்ளவும் மறைமுக நோக்கில் இந்த பிளவை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாகவே தற்போது புலப்படுகிறது.

உண்மையில் இவர்கள் பிளவுப்படவில்லை. தேர்தலுக்கு பின்னர் இரண்டு தரப்பினரும் இணைந்து பழைய பழக்கத்தின்படி கட்சியை முன்னெடுத்துச் செல்வார்கள். இதன் காரணமாகவே கட்சியில் இருந்து நீக்கப்படுவது தொடர்பில் பெரிதாக குழப்பமடைகின்றனர்.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி நான் ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி பிவித்துரு ஹெல உறுமய கட்சியை ஆரம்பித்தேன். மீண்டும் ஜாதிக ஹெல உறுமயவின் எனது அங்கத்துவத்திற்கு என்ன நடக்க போகிறது என்பது தொடர்பாக பதற்றப்படவில்லை. நாங்கள் முற்றாக விலகி வந்து விட்டோம் என்பதே இதற்கு காரணம்.

ஆனால், இவர்கள் பெரிதாக பதற்றமடைகின்றனர். இவர்களுக்கு இடையில் பிளவு ஏற்படவில்லை என்பதே உண்மையான காரணம். தேர்தலுக்கு பின்னர் இணையும் மறைமுக வேலைத்திட்டத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.