சிங்கள வாக்கு வங்கியை இழக்க முடியாது - ரணில்

Report Print Steephen Steephen in அரசியல்

கட்சியில் இருந்து விலகிய எவருக்கும் உண்மையான ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களாக இருக்க முடியாது என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பான்ஸ் பிளேஸில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே மீட்க முடியும். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலே மக்கள் மூன்று வேளை உணவை சாப்பிட முடியும். இதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருமாறு கூறுகிறோம்.

ஐக்கிய தேசியக் கட்சியினாலேயே நாட்டை காப்பாற்ற முடியும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் ஆட்சியை கையளித்தோம். 8 மாதங்களாக என்ன செய்தனர்?. பொருளாதார பிரச்சினை உட்பட எவற்றுக்கும் தீர்வுகளை காணவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி மாத்திரமே ஒரே கட்சியாக அனைத்து தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடாக போட்டியிடுவதை எவராலும் தடுக்க முடியாது.

நாங்கள் இலங்கையர்கள் என்ற அடையாளத்தை கொண்டிருக்கின்றோம். எமக்கு சிங்கள வாக்கு வங்கி உள்ளது. அதனை இழக்க முடியாது. முஸ்லிம் மற்றும் பறங்கி வாக்கு வங்கியும் உள்ளது. தற்போது நான் 15 முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளேன். இது 16வது முறை எனவும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.