மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நாடாளுமன்ற பலம் எங்களிடம் இருக்க வேண்டும் - மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அதிகாரத்திற்கு கொண்டு வந்து மக்கள் எதிர்பார்த்த விடயங்களை நிறைவேற்ற பெரும்பான்மை பலத்துடன் கூடிய நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும் என பிரதமரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட வேட்பாளர் திலும் அமுனுகம இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பண்டாரநாயக்க, டி.ஏ. ராஜபக்ச ஆகியோர் இணைந்து ஆரம்பித்த கட்சி. எமது இதயங்களில் இருக்கும் கட்சி. எனினும் எங்களை கட்சியில் இருந்து விரட்டிய பின்னர் புதிய கட்சியை ஆரம்பிக்க நேரிட்டது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 69 லட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமாயின் நாடாளுமன்றத்தின் பலம் எங்களிடம் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இருந்தால் மாத்திரமே அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எங்களால் வேலை செய்ய முடியும்.

ஜனநாயகத்தை பற்றி பெரிதாக பேசும் ஐக்கிய தேசியக் கட்சி தேர்தல்களை நடத்துவதற்கு பதிலாக அவற்றை ஒத்திவைத்தது எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.