அவசரமாக எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறிய முடியாது - ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்றி

Report Print Steephen Steephen in அரசியல்

அமெரிக்காவுடனான எம்.சீ.சீ உடன்படிக்கையை கிழித்தெறிய வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சிலர் கூறினாலும் அப்படியான அவசரம் அரசாங்கத்திற்கு இல்லை என பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் வேட்பாளரும், ஜனாதிபதிக்கு நெருக்கமான ஆலோசகருமான ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

அந்த உடன்படிக்கை குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து, நாட்டுக்கு ஒவ்வாத விடயங்களை கிழித்தெறியவும், நாட்டுக்கு சாதகமானவை இருந்தால், அவை பற்றி கலந்துரையாடி தீர்மானத்தை எடுக்க முடியும்.

அரசாங்கத்தில் பல்வேறு அங்கத்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றனர். எல்லோரும் கூறுவதை எங்களால் செய்ய முடியாது. வேறு நாட்டுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கை, அமெரிக்காவுடன் செய்துக்கொண்ட உடன்படிக்கையை உடனடியாக கிழித்து வீச முடியாது. அது குறித்து நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அதேபோல் நாங்கள் கையெழுத்திடவும் இல்லை.

இதனை புரிந்துக்கொள்ள வேண்டும். எமக்கு தற்போது வலுவான அரசாங்கம் இல்லை. எதிர்க்கட்சிக்கே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளது. இதனால், நாங்கள் குழு ஒன்றை நியமித்து ஆராய்ந்தோம். தற்போது அமைச்சரவை உப குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. இன்றே கிழித்து வீச வேண்டும் என்ற அவசரம் எதற்கு. அவசரப்பட்டு தீர்மானங்களை எடுக்க முடியாது. அது ராஜதந்திர பாதிப்புகளை ஏற்படுத்தும் எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்த உடன் எம்.சீ.சீ உடன்படிக்கை கிழித்தெறியப்படும் என பொதுஜன பெரமுன ஜனாதிபதித் தேர்தல் மேடைகளில் கூறியதை ஏன் நிறைவேற்றவில்லை என தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான செய்தி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அலி சப்றி இதனை குறிப்பிட்டுள்ளார்.