எம்.சீ.சீ உடன்படிக்கை தொடர்பான தனது நிலைப்பாட்டை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் என்ற எம்.சீ.சீ உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கம் தேர்தலுக்கு முன்னர் தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அதேநேரம் படையினர் தொடர்பான “சோபா”உடன்பாடு மற்றும் திருகோணமலையின் எரிபொருள் குதங்கள்,கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு தளம் மற்றும் மத்தளை வானூர்தி தளம் ஆகியவை தொடர்பிலும் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று செய்தியாளர் சந்திப்பின் போது இந்தக் கோரிக்கைகளை முன்வைத்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெறுமனே நாடளாவிய ரீதியில் மக்களிடம் சென்று வருவதாக ஊடக சாகசம் காட்டாமல் இந்த விடயங்கள் தொடர்பில் தமது நிலைப்பாட்டை வெளியிடவேண்டும் என்று நளின்த ஜெயதிஸ்ஸ கேட்டுக்கொண்டார்.

எம்.சீ.சீ தொடர்பில் அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலின் போது இழிவாக பேசியது. எனினும் தற்போது அரசாங்கம் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

எனவே எம்.சீ.சீ உடன்படிக்கையை தேர்தலுக்கு முன்னரும் சோபா உடன்படிக்கையை தேர்தலின் பின்னரும் அரசாங்கம் கைச்சாத்திடப்போகிறதா என்பது தொடர்பில் கோட்டாபய தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என்று நளிந்த திசாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கமும் மைத்திரி, ரணில் அரசாங்கத்தை போன்றே சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கமாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்தியாவுடன் கொழும்பு துறைமுக கிழக்கு தளம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படுகிறது. இதுவும் எம்.சீ.சீ உடன்படிக்கையை போன்றது என்று நளிந்த சுட்டிக்காட்டினார்.