எமது அரசாங்கத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்! எஸ்.பி.திஷாநாயக்க

Report Print Gokulan Gokulan in அரசியல்

காணி உறுதிப்பத்திரம் அற்ற அனைவருக்கும் தமது அரசாங்கத்தின் ஊடாக காணி உறுதிப்பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் எஸ்.பி.திஷாநாயக்க தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவ ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய கலாச்சார மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றிருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது அரசாங்கத்தின் ஊடாக தான் சமுர்த்தி உத்தியோகத்தர் நியமனம், கிராம உத்தியோகத்தர் நியமனம், ஆசிரியர் நியமனம் போன்றவற்றை வழங்கி வைத்தோம். தோட்டப்புறங்களுக்கு ஆரம்பகால பகுதியில் மின்சாரம் இல்லை.

தோட்டப்பகுதிகளுக்கு முதன் முதலில் மின்சாரத்தை வழங்கி வைத்தது நாம். நான் 14 வருட காலம் கண்டி மாவட்டத்தில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தேன். என்னை கண்டி மாவட்டத்திற்கு அழைத்து சென்றது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ.

மீண்டும் நுவரெலியா மாவட்டத்திற்கு வந்து மக்களுக்கு சேவையினை தொடர கிடைத்தமை தொடர்பில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தமிழ், சிங்களம், முஸ்லிம் ஆகிய அனைவருக்கும் கடந்த காலங்களில் நாம் சேவை செய்ததை அனைவரும் அறிவார்கள்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் தற்பொழுது கார்பட் இடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள பிரதான வீதிகளில் கார்பட் இடப்படுவது போல் தோட்டபகுதிகளில் உள்ள வீதிகளுக்கும் கார்பட் இட நடவடிக்கை எடுப்போம்.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை தற்பொழுது வீழ்ச்சியடைந்து காணப்படுகிறது. மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்த பாடசாலைகளை நாம் அபிவிருத்தி செய்ய வேண்டும்.

எமது மாவட்டத்தை பொருத்தவரையில் வைத்தியதுறை, பொறியியல்துறை மற்றும் ஏனைய துறைகளையும் ஒரே பாடசாலைகளில் கற்பதற்கான நடவடிக்கையினை நாம் மேற்கொள்வோம்.

கொரோனா தொற்று தற்பொழுது குறைவடைந்த நிலையில் காணப்படுகின்றது. ஆகையால் தற்பொழுது எமது மாவட்டத்தில் சுற்றுலாத்துறையினை அதிகரிப்பதற்கான முயற்சியினை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.