ரணில் விக்ரமசிங்க பிரிவினைவாதி என்று சுமத்திய குற்றச்சாட்டு தவறானது -உதய கம்மன்பில

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த 25 ஆண்டுகளாக தமது தரப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது பிரிவினைவாத குற்றச்சாட்டை சுமத்தியது தவறு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட வேட்பாளரும், பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதுவரை நாங்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்து வந்தோம். தமிழ் பிரிவினைவாதிகளையும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை ரணில் விக்ரமசிங்கவே போஷிப்பதாக நாங்கள் குற்றம் சுமத்தினோம்.

தமிழ் பிரிவினைவாதிகள் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளை இணைத்துக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியை அழித்து வருவதாக கடந்த 25 ஆண்டுகளாக நாங்கள் ரணில் விக்ரமசிங்க மீது குற்றம் சுமத்தி வந்தோம். தற்போது திரும்பி பார்ப்பது சரியானது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் றிசார்ட் பதியூதீன் போன்ற முஸ்லிம் அடிப்படைவாதிகளும் சுமந்திரன் போன்ற தமிழ் பிரிவினைவாதிகளும் இருந்தாலும் உண்மையில் அவர்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் இருக்கவில்லை, சஜித் பிரேமதாசவுடனேயே இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் பிரிந்த பின்னரே றிசார்ட், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன், திகாம்பரம் மற்றும் சுமந்திரன் போன்றோர் யாருடன் இருக்கின்றனர் என்பதை அறிந்துக்கொண்டோம் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.