சுதந்திரக் கட்சியின் வாக்குகள் வேண்டும், ஆனால் விருப்பு வாக்குகளை அளிக்க வேண்டாம் - உதித்த லொக்குபண்டார

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும் அந்த கட்சியின் வேட்பாளர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்காது தோற்கடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் புதுளை மாவட்ட வேட்பாளரும் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட செயலாளருமான உதித்த லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

பதுளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு இவர்களின் வாக்குகள் தேவை. அனைவரது வாக்குகளும் தேவை. ஆனால், அவர்களுக்கு விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம். எமக்கு பொதுஜன பெரமுனவின் மொட்டுச் சின்னத்தின் அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வாக்குகள் வேண்டும். அவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்ப விருப்பு வாக்குகளை வழங்க வேண்டாம்.

மகிந்த ராஜபக்சவின் பிள்ளைகளை சிறையில் அடைத்த போது, பொதுஜன பெரமுனவினருக்கு தொந்தரவு கொடுத்த போது, எம்மவர்களை சிறையில் அடைத்து பழிவாங்கும் போது, இவர்கள் அரச பங்களாக்களில் விஸ்கி குடித்துக்கொண்டிருந்தனர்.

இவர்களுக்கு விருப்பு வாக்கை வழங்க எங்களுக்கு என்ன பைத்தியமா?. இல்லை. நாங்கள் தூய்மையான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எமது அரசாங்கத்தை அமைப்போம். அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் கொண்ட அரசாங்கம். இதுதான் செய்தி. எங்களை கைவிட்டு செல்லாதவர்கள் எம்முடன் இருக்கின்றனர்.

இவர்கள் ஒரு மாவட்டத்தில் ஒருவர் என்ற கணக்கில் 25 பேர் நாடாளுமன்றத்திற்கு வந்தால், எமக்கு எதிராக செயற்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம் எனவும் உதித்த லொக்கு பண்டார குறிப்பிட்டுள்ளார்.