கிளிநொச்சியில் இரண்டு கல்வி வலயங்களை உருவாக்கி கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் ! மு.சந்திரகுமார்

Report Print Gokulan Gokulan in அரசியல்
47Shares

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது 101 பாடசாலைகளுக்கு ஒரேயொரு கல்வி வலயமே காணப்படுகின்றது. இதுவும் மாவட்டத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கிறது.

எனவே அடுத்து வருகின்ற ஐந்து வருடங்களில் கிளிநொச்சியை இரண்டு கல்வி வலயங்களாக உருவாக்கி மாவட்டத்தின் கல்வியை முன்னேற்றம் நோக்கி கொண்டு செல்வேன் என கேடயச் சின்னத்தில் சுயேச்சைக் குழு 5 இல் போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி - வடக்கச்சியில் இன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி,பொருளாதாரம் போன்றவற்றில் தமிழ் மக்களை ஒரு முன்னேற்றகரமான நிலைக்கு கொண்டு செல்ல தவறின் தமிழ் மக்களின் இருப்பை அவர்களின் தேசியத்தை எவராலும் காப்பாற்ற முடியாது போய்விடும்.

எனவே நாம் எமது இனத்தின் இருப்பை பலமாக பேணி பாதுகாக்கும் முயற்சியில் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உழைத்து வருகின்றோம்.

அதனடிப்படையில் தான் கிளிநொச்சி கல்வி வலயத்தை இரண்டாக பிரிக்கும் எனது நடவடிக்கையினை மீளவும் தொடர்வேன். இது எனது தேர்தல் கால வாக்குறுதி அல்ல.

வட்டக்கச்சி,இராமநாதபுரம்,மாயவனூர் போன்ற பிரதேசங்களுக்கான சுத்தமான குடிநீர் வசதிகள் மற்றும் புழுதியாற்று ஏற்று நீர்ப்பாசனம் திட்டத்தை மீண்டும் பயன்மிக்கதாக மாற்றி மீள இயங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தேர்தல் நெருங்கி வருகின்ற போது எம்மீது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றனர். தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுணம் பிழைக்க வேண்டும் என்றக் கணக்கில் சில நடவடிக்கைகளில் இறங்கியிருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.