புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதே அடுத்த அரசின் பிரதான பணி: பசில்

Report Print Steephen Steephen in அரசியல்
53Shares

நாட்டுக்கு பொருத்தமான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதை பிரதான பணியாக கருதி அடுத்த அரசாங்கம் செயற்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பசில் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.

தேர்தல் முறையை மாற்றுவது, நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் ஆகியவற்றின் அதிகாரங்கள் தொடர்பாக காணப்படும் சிக்கல்களை நீக்கும் வகையிலான அரசியலமைப்புச் சட்டத்தின் தேவை எழுந்துள்ளது.

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. உதாரணமாக 30 பேரை கொண்ட அமைச்சரவை நியமிக்க வேண்டும் எனக் காணப்படுவதுடன் மற்றுமொரு ஷரத்தில் அது மீறப்படுகிறது.

தற்போது நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களை உண்மையான சுயாதீன குழுக்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

வேறு அணிகளின் அழுத்தங்களுக்கு அடிப்பணியாது நாடாளுமன்றத்தில் செயற்படக் கூடிய வலுவான அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்ட அரசாங்கத்தை அமைப்பது மக்களுக்கு அவசியமானது.

அதேபோல் வலுவான எதிர்க்கட்சியும் அவசியம். மக்கள் விடுதலை முன்னணிக்கு வாக்குகள் செல்வது நல்லதா, நகைச்சுவை வழங்கும் எதிர்க்கட்சி தேவையா அல்லது அறிவற்ற எதிர்க்கட்சியாக என்பது குறித்தும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் எனவும் பசில் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.