தேசியப்பட்டியல் விடயத்தில் யாரும் தனித்து முடிவெடுக்க முடியாது - செல்வம் அடைக்கலநாதன்

Report Print Ashik in அரசியல்
663Shares

தேசியப்பட்டியல் விடயத்தில் யாரும் நினைத்தவரை கொண்டு வருவதற்கான வாய்ப்பினை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றுமையின்மை என்பதை மக்கள் வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஒற்றுமை இல்லாமல் செயல்பட வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் மக்கள் தங்களுடைய வாக்குரிமையை பயன்படுத்தி உள்ளனர்.

அந்த வகையில் 14 ஆசனங்களை கொண்ட நாங்கள் இன்று 10 ஆசனங்களுடன் இருக்கின்றோம் என்றால் சிந்திக்கப்பட வேண்டிய விடயம்.

மக்கள் மத்தியில் எங்களுடைய செயற்பாடுகள் இனி வரும் காலங்களில் துரிதமாக அபிவிருத்தி சம்பந்தமாக சிந்திக்க வேண்டும் என்பது இன்று நாங்கள் உணர்ந்த விடயம்.

சமமான முறையில் தேசியக்கூட்டமைப்பு 3 ஆசனங்களை கொண்டாலும் ஏனையவர்களும் வாக்குகளைப் பெற்று ஆசனங்களைப் பெற்று இருக்கின்றார்கள்.

மக்களுடைய விருப்பம் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்படுவதே. முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்ணேஸ்வரன் தான் இணைந்து செயல்பட உள்ளதாக தெரிவித்திருந்தார் குறித்த விடயம் வரவேற்கத்தக்கது. அதேபோல் கஜேந்திர குமார் பொன்னம்பலம் இதில் இணைந்து கொள்ள வேண்டும்.

தனிப்பட்ட நபர்கள் மீது விருப்பு வெறுப்புகளை ஒரு பக்கம் வைத்துவிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக நாங்கள் செயல்பட வேண்டும்.

நாடாளுமன்றத்திற்கு உள்ளே நாங்கள் எல்லோரும் ஒன்றாக செயற்படுகின்ற ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்குவதற்கு நிச்சயமாக நாங்கள் முயற்சி செய்வோம்.

அந்த வகையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தோடும், முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோடும் நாங்கள் பேச இருக்கின்றோம்.

எங்களுடைய போராட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடி இன்றைக்கு ஒரு அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாய் இருக்கின்ற போராளிகள் தனித்துவத்தோடு இருப்பதாக தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அமைப்பு இயங்குவது போல , ஈரோஸ் போன்ற ஆயுதப் போராட்டத்தில் தங்களை களம் இறக்கிய அனைத்து கட்சிகளுடனும் நாங்கள் பேசி இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பங்குதாரர்களாக மாறுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொண்டுள்ளோம்.

எங்களுடைய பிரதேசத்தில் மக்களுடைய சிந்தனை அபிவிருத்தி சம்பந்தமாக தங்களுடைய கஷ்டங்களை போக்குகின்ற ஒரு நிலையை இந்த தேர்தலில் வாக்களிப்பின் ஊடாக காட்டியுள்ளார்கள்.

அபிவிருத்தி என்பது முக்கியமான விடயம். அந்த அபிவிருத்தி இல்லாத காரணத்தால் தான் கண்டவர்களும் எமது தேசத்துக்குள் மூக்கை நுழைக்கின்ற செயல்பாடு அமைந்திருக்கின்றது.

எங்களுடைய தேசத்தில் இனி சிங்கள கட்சிகளுக்கு அல்லது சிங்கள கட்சிகளோடு இணைந்து இருந்த தமிழர்களுக்கு, சிங்கள கட்சிகளுடன் உள்ள முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எங்களுடைய தமிழ் வாக்குகள் செல்லாத ஒரு நிலையை நாங்கள் உருவாக்க வேண்டும். இது ஒரு செய்தியாக மக்கள் எங்களிடம் கையளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் மக்களுக்காக என்றைக்கும் குரல் கொடுக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அநீதிகள் ஏற்பட்டால் அதையும் தட்டிக்கேட்கும். அந்த வகையில் இனி தவறுகள் எந்த இடத்தில் இருந்து வந்தாலும் அதை தட்டிக் கேட்கின்ற கடமை எங்களிடம் இருக்கின்றது. அதை நாங்கள் நிச்சயமாக செய்து கொள்ளுவோம்.

எங்களுடைய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். வன்னி மாவட்டத்தில் 405 வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்த சூழலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மேலும் உயர்த்தி வைத்த மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் என்ற ஒரு சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. தேசியப்பட்டியல் ஆசனம் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும். என்னை பொருத்தமட்டில் மக்கள் நிராகரித்தவர்களுக்கு என்ன செய்வது என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தமட்டில் அங்கே இருக்கின்ற பங்காளிக் கட்சிகளோடு சேர்ந்து தான் ஒரு முடிவு எட்டப்பட வேண்டும். தமிழரசுக் கட்சி தனியாக முடிவு எடுக்கக் கூடாது என்பது எனது கருத்து.

இந்த விடயத்தில் எல்லாருக்கும் உரித்து உள்ளது. இந்த தேசியப்பட்டியல் சம்பந்தமாக யாரும் நினைத்தவரை கொண்டு வருவதற்கான வாய்ப்பினை ஒரு போதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

எங்களுடன் பேச வேண்டும். இந்த பேச்சுவார்த்தையின் ஊடாக நாங்கள் ஒற்றுமையான தீர்மானத்தை எடுக்க வேண்டும்.

வடக்கு கிழக்கில் நாடாளுமன்ற ஆசனங்கள் எல்லா இடத்திலும் இருந்தாலும் அம்பாறை புறக்கணிக்கப்பட்டுள்ளது. அதனையும் நாங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.

யாழ்ப்பாணம்,வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, ஆகிய மாவட்டங்களில் தமிழ் பிரதிநிதித்தவங்கள் இருக்கின்றது. ஆனால் அம்பாறை பிரதேசத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லை. அந்த பிரதிநிதித்தவத்தை அம்பாறைக்கு ஏன் கொடுக்கக்கூடாது என்பது எனது கருத்து.

ஆனால் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதில் முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு மூன்று கட்சிகளிடம் இருக்கிறது. இந்த விடயம் தொடர்பில் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும்.

தேசியப்பட்டியலில் முக்கியமானவர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி சட்டத்தரணி தவராஜா குறித்த பட்டியலில் இருக்கின்றார்.மேலும் பெண் பிரதிநிதித்தவம் என்ற வகையில் கடந்த முறை நாங்கள் ஒரு பெண் பிரதிநிதித்துவத்திற்கு ஆசனம் வழங்கி இருந்தோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் மூன்றும் சேர்ந்து முடிவெடுக்க வேண்டும். நினைத்ததை முடிவெடுக்கின்ற நிலை இனி வரும் காலங்களில் இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.