இலங்கை படையினருக்கு எதிராக போர் குற்றங்களை சுமத்தும் ஜெனிவா யோசனைக்கு எதிராக தொடர்ந்தும் போராடப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ரியர் அத்மிரல் சரத் வீரசேகர நேற்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் மீண்டும் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளது.
இதனால், புதிய அரசாங்கத்தின் உதவியுடன் எமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வேலைத்திட்டங்களை அங்கீகரித்து மக்கள் வழங்கிய அதிகாரம், இலங்கைக்கு எதிராக செயற்படும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மின் சூகா மற்றும் புலம் பெயர் புலிகள் அடைந்துள்ள மிகப் பெரிய தோல்வி எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை மாற்ற முயற்சிப்பதாக அரசசார்பற்ற நிறுவனங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிசேல் பெச்லட்டிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் 19வது திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் அமுல்படுத்துமாறு ஜெனிவா மனித உரிமை பேரவை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும் இந்த கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.