தேர்தலில் எமக்கு மிகபெரிய ஜனநாயக மோசடி நடந்துள்ளது - வன்னி பட்டதாரிகள் சங்கத் தலைவர்

Report Print Theesan in அரசியல்

நாடாளுமன்றத்தேர்தலில் எமக்கு, அளிக்கப்பட்ட வாக்குகள் சூறையாடப்பட்டிருக்கின்றது என வன்னி பட்டதாரிகள் சங்கத் தலைவர் ம.ஆனந்தராஜ் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை வீடுவீடாக சென்று சந்தித்து எங்களுடைய நிலைப்பாடுகள் கொள்கைகளை விரிவாக தெரியப்படுத்தியிருந்தோம்.

இதன்பயனாக ஆகக்கூடுதலாக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளையும், குறைந்தளவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை நிச்சயம் நாம் பெற்றிருப்போம் என்று எமது ஆதரவாளர்களிற்கும் மக்களிற்கும் தெரியப்படுத்துகின்றோம்.

துரதிஸ்டவசமாக மிகப்பெரிய ஜனநாயக மோசடியின் விளைவாக அந்த வாக்குகளை நாம் இழந்திருக்கின்றோம்.

நெருங்கிய உறவினர்கள் நண்பர்களால், அளிக்கப்பட்ட வாக்குகள் கூட சூறையாடப்பட்டிருக்கின்றது. அது எப்படி நடந்தது என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் இல்லை.

ஆனால் அளிக்கப்பட்ட வாக்குகள் இல்லை என்பதே உண்மை. மொத்தமாக 275 வாக்குகள் மாத்திரமே எமக்கு கிடைக்கப்பெற்றிருப்பதாக உள்ளது.

இது உயர்கல்வி சமூகத்திற்கும், அபிவிருத்தி சார் அரசியலுக்கும் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றமாகவும், அபாய ஒலியாகவும் நாங்கள் இதனை காண்கின்றோம்.

இந்த ஜனநாயக உரிமை மீறலை யார் செய்தார்களோ அவர்கள் விரைவில் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற செய்தியை சொல்லிக்கொள்கின்றோம்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையாளருக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுத இருக்கின்றோம். சட்டரீதியான ஆலோசனைகளையும் பெற்றுக்கொண்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.