தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் த.தே.கூட்டமைப்பிற்குள் நெருக்கடி! எடுக்கப்பட்ட முடிவிற்கு எதிராக நடவடிக்கை?

Report Print Sujitha Sri in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனம் தவராசா கலையரசனுக்கு வழங்கப்படுவதாக இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த முடிவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இன்றை தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் கூறுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்துள்ள தேசியப் பட்டியல் ஆசனத்திற்கான பிரிதிநிதி தன்னிச்சையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தேசியப் பட்டியல் ஆசன தெரிவு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் பங்காளிக் கட்சிகளான புளொட் மற்றும் ரெலோ கட்சிகளுக்கும் அறிவிக்கப்படாமலேயே முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த முடிவு ஒட்டுமொத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் முடிவு இல்லை. எமக்கு அறிவிக்கப்படாமல் இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டமைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

குறித்த தேசியப் பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராஜாவுக்கு வழங்குவதே சிறப்பானது. இது குறித்து பரிந்துரைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கருத்தையும் கேட்டு தேசியப் பட்டியல் குறித்த முடிவை எடுத்திருக்க வேண்டும் என அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் தன்னிச்சையாக தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் இன்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் கூட்டமைப்பிற்குள் பல்வேறு நெருக்கடி நிலைகளை ஏற்படுத்தியுள்ளது.