தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வஜிர அபேவர்தனவுக்கு வழங்க வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைத்துள்ள ஒரே ஒரு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் அந்த கட்சியில் தற்போதுள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக்கொள்ள போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளதன் காரணமாக அந்த ஒரு பதவியை பெற பலர் முயற்சித்து வருகின்றனர்.

காலியில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் காலி மாவட்ட அதிகார சபைக் கூட்டத்தில் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வஜிர அபேவர்தனவுக்கு வழங்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய பிக்கு முன்னணியின் தலைவர் உடுகம சாரானந்த தேரர் இந்த யோசனையை முன்வைத்துள்ளதுடன் அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது வெற்றிடமாக இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் பதவியையும் வஜிர அபேவர்தனவுக்கு வழங்க வேண்டும் எனவும் துணை யோசனை ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி அதிகமான வாக்குகளை காலி மாவட்டத்திலேயே பெற்றுக் கொண்டுள்ளதால், அந்த கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர் வஜிர அபேவர்தன எனவும் காலி மாவட்ட அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியலில் இடம்பெற்றிருந்த ஜோன் அமரதுங்க, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் தான் என்பதால், தனக்கே தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இதனை தவிர ருவான் விஜேவர்தன, பாலித தெவரப்பெரும போன்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அந்த பதவியை வழங்க வேண்டும் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.