ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தயார்! ருவான் விஜேவர்தன

Report Print Murali Murali in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் விரும்பினால் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக, அந்த கட்சியின் துணை பொதுசெயலாளர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல தயாராக இல்லையெனவும் அவர் கூறியுள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“கட்சியின் தலைமை பதவிக்கு பொருத்தமானவர் விவாதித்து முடிவு செய்யப்படும். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்பவர் நாட்டு மக்களின் இதயங்களை வென்றெடுக்க கூடிய ஒருவராக இருக்க வேண்டும்.

இது தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினருக்கும் பொருந்தும்.

தலைமை மற்றும் தேசிய பட்டியல் இரண்டையும் பொறுத்தவரை கட்சி சரியான முடிவை எடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

எனினும், கட்சி உறுப்பினர்கள் விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு கட்சியை வழிநத்த தயாராக இருக்கின்றேன்” என அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் நாடாளுமன்ற தேர்தல் அண்மையில் இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தை கூட கைப்பற்றாது பெரும் தோல்வியை சந்தித்தது.

பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்திருந்தது.

இந்நிலையில், கட்சியின் தலைமை பதவியில் இருந்து விலகப்போவதாக ரணில் விக்கிரமசிங்க இன்று அறிவித்திருந்தார். இவ்வாறான நிலையிலேயே, ருவான் விஜேவர்தன இவ்வாறு கூறியுள்ளார்.