மாவையின் தடுமாற்றம்...! சிறை மீண்ட செம்மலாக மீள வருவாரா....?

Report Print Tamilini in அரசியல்

தமிழர்கள் மத்தியில் நீண்ட பாரம்பரியம் கொண்ட - பழமையான கட்சியான இலங்கைத் தமிழரசும், அதனைப் பிரதான பங்காளியாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் பலத்த பின்னடைவை எதிர்கொண்டுள்ளன என்பது வெளிப்படையாகத் தெரியும் விடயம்.

அந்தப் பின்னடைவு நிலைமையை மிக மோசமாக்கும் பணியை அக்கட்சியின் தலைவர்கள் செய்து வருகின்றமை பலரையும் ஆச்சரியப்பட வைக்கின்றது.

இலங்கைத் தமிழரசுக்கு இத்தகைய பின்னடைவு நிலையை - தண்டனையை - தமிழ் மக்கள் கொடுத்தமை நியாயமானதுதான் என்று கூறும் விதத்திலான நடவடிக்கைகளை அதன் தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றமை அக்கட்சிக்குப் பெரும் தூரதிருஷ்டமின்றி வேறில்லை.

தோல்வியில் பெரும் பொறுபோடு நடந்து கொண்ட வேண்டிய தலைவர்கள், சிறுமைத்தனமாக - தோல்வியிலும் பதவி தேடி அலையும் நப்பாசைத் தனத்தோடு - செயற்படுகின்றனரோ எனக்கருதும் நிலைமை.

மற்றவர்கள் எப்படிப் பேசினாலும், மற்றவர்கள் எப்படித் தூண்டினாலும், அவற்றுக்கு இடங்கொடாமல், யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, தாராள மனதோடும், தலைமைத்துவப் பண்போடும், அனுபவத் தலைமைத் தகைமையோடும் நடந்து கொண்டிருக்க வேண்டிய மாவை சேனாதிராசா, கடைசியில் தமது பெயரை "பதவி ஆசையுடன் அலையும்' ஓர் அற்பத் தலைவராகக் காட்டிக் கொள்ளும் விதத்தில் நடந்து கொண்டிருக்கின்றமை விசனத்துக்குரியது.

தோல்வியில் பெரும் பொறுபோடு நடந்து கொண்ட வேண்டிய தலைவர்கள், சிறுமைத்தனமாக - தோல்வியிலும் பதவி தேடிஅலையும் நப்பாசைத் தனத்தோடு - செயற்படுகின்றனரோ எனக்கருதும் நிலைமை, சர்ச்சை குறித்து முரண்பாடான விடயங்களைச் சொல்லுகின்றன. தம்முடன் முதலில் பேசிய மாவை சேனாதிராசா அப்போது இது குறித்துப் பேசாமல், மகளிர் பிரதிநிதித்துவம் என்ற முறையில் அதனை சசிகலா ரவிராஜூக்கு வழங்கலாம் என்றே தன்னிடம் கூறினார் என சம்பந்தன் குறிப்பிடுகின்றார்.

ஆரம்பத்தில் மாவை சேனாதிராசா அப்பதவியைத் தமக்குத் தரும்படி கோரவில்லை, ஆனால் கடைசி நேரத்தில் துணைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானமும், பொருளாளர் கனகசபாபதியும், மாவையின் மகனும் வந்துதான் மாவைக்குக் கொடுக்க வேண்டும் என்றார்கள் என சம்பந்தன் குறிப்பிடுகின்றார்.

ஆனால், அந்தத் தேசியப் பட்டியல் நியமனம் தமக்கு வேண்டும் என்று மாவை அடம் பிடிக்கின்றார் என்பது போன்ற விதத்தில் செய்திகள் வெளிவருவது முதிர்ந்த அரசியல்வாதியான மாவை சேனாதிராசாவுக்கு அழகல்ல.

நாடாளுமன்ற அரசியலில் தமது பாதையை மாவை ஆரம்பித்ததே தேசியப் பட்டியல் மூலம்தான். ஒரு தடவை அல்ல. இரண்டுதடவைகள். ஒருமுறை அமிர்தலிங்கம் கொல்லப்பட்ட போதும், அடுத்த தடவை நீலன் திருசெல்வம் கொல்லப்பட்ட போதும்.

அதற்குப் பின்னரும் ஐந்து தடவைகள் தேர்தலில் போட்டியிட்டு வென்று நாடாளுமன்ற சிறப்புரிமைகள், வசதிகள், வாய்ப்புகளை எல்லாம் அவர் அனுபவித்தாயிற்று.

அதற்குப் பின்னரும் இன்னும் அந்தப் பதவி முறையற்ற வகையிலேனும் தமக்கு வேண்டும் என்று அவர் அடம் பிடிப்பாராயின் அது பொருத்தமற்றது என்பது கண்கூடு.

மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர் - அதுவும் மாவட்ட நிலையில் ஆறாவது நிலைக்குத் தள்ளப்பட்ட பின்பு - அத்தகைய விருப்பும் எதிர்பார்ப்பும் அவரிடமிருந்து வருமாயின் அது பெரும் சுயநலமாகத்தான் நோக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் நாடாளுமன்றம் போகின்றார்கள், ஆகவே தமிழரசுத் தலைவரும் போக வேண்டும் என்று மாவையின் ஆதரவாளர்கள் சிலர் கூறும் காரணம் உப்புச் சப்பற்றது. மாவையை எம்.பியாக்குவதன் மூலம் தங்களின் காரியங்களை சாதிக்க எதிர்பார்ப்போரின் தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட ,வலிந்த காரணங்கள் - வியாக்கியானங்கள் - இவை.

சரி, பிழை எப்படியும் இருந்து விட்டுப் போகட்டும். கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவு நிலையில் தமக்குப் பதவி வேண்டி - அதுவும் தோற்கடிக்கப்பட்ட பின்னர் - நியாயமற்ற முறையில் அந்தப் பதவிக்கு அலைந்து, கட்சிக்கும், தமக்கும் இழுக்குத் தேடுகின்றமையை மாவையர் தவிர்த்துக் கொள்வது நல்லது.

தோல்விக் குழப்பத்தில் சசிகலா ரவிராஜ் பிரதிபலித்த சில நடவடிக்கைகள், கருத்துகளினால் முரணிலை ஏற்பட்டது என்பது உண்மையே. ஆனால் அவர் அதைத் திருத்திக் கொள்ள முற்பட்டதன் மூலம் தமது நேர்மைத்தனத்தை நிரூபித்துக் கொண்டார். அரசியலில் புதியவரான அவரது அந்தத் தடுமாற்றத்தை சமூகம் குறை காணாது, கண்டும் காணாமல் புறமொதுக்கி மறந்து விடும்.

ஆனால், மாவையர் அப்படியல்லர். நீணட வரலாறு கொண்ட அரசியல் தலைவர். அவரிடமிருந்து அந்த முதிர்ச்சியைத் தமிழினம் எதிர்பார்க்கின்றது.

சுற்றி நின்று குழப்புவோரைக் கழற்றிக் கடாசி விட்டு, பழைய "சிறை மீண்ட செம்மலாக" எழுபதுகளில் வரவேற்கப்பட்ட மாவையை மீளக் காண விரும்புகிறோம். அந்த மாவைக்குப் பதவி ஆசை கிடையாது என்பது எமக்குத் தெரியும்.