தமிழர் அரசியல் பரப்பில் யார் இந்த கலையரசன்?

Report Print Gokulan Gokulan in அரசியல்

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் முன்மொழியப்பட்ட அம்பாறை மாவட்ட நாவிதன்வெளியின் தவராசா கலையரன் தொடர்பான பார்வை இது என தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்.

இது தொடர்பான அவரின் செய்திக்குறிப்பில் மேலும்,

மட்டக்களப்பு மாவட்டம் மறத்தமிழ் ஊர் துறைநீலாவணையில் 1970ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி தவராசா ஶ்ரீரங்கம் தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக பிறந்தார் கலையரசன் எனும் தமிழ் மகன்.

மூன்று ஆண் தம்பிகளும், மூன்று பெண் சகோதரிகளுடனும் துறைநீலாவணையில் விருட்சமான நல்லொழுக்கமும் தமிழ் இன உணர்வுமுள்ள குடும்பமாய் வாழ்ந்து மழைலை பருவம் தொடக்கம் தமிழ் உணர்வுமிக்கவரகளாய் திகழ்ந்தனர்.

கல்வி நிலை

துறைநீலாவணை மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியும், 15ஆம் கிராமம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடைநிலை கல்வியும், அன்னமலை நாவிதன்வெளி மகாவித்தியாலயத்தில் உயர்தர கல்வியில் சித்தி எய்தினார்.

திருமணம்

நாவிதன்வெளி 15ஆம் கிராமத்தில் தனது உறவுமுறை மணமகளான நிரோஜினியை கரம்பிடித்து மூன்று பெண் பிள்ளைகளுக்கும், இரண்டு ஆண்பிள்ளைகளுமாக ஐந்து பிள்ளைகளின் தந்தையாக கலையரசன் தனது குடும்பத்தில் தமது பிள்ளைகளை சிறந்த கல்வி சீலர்களாகவும் ஒழுக்க விழிமியங்களுடன் வளர்த்துள்ளார்.

அரசியல்பணி

தடம்மாறா கொள்கையும் பற்றுறுதியும் இயல்பாகவே கலையரசனிடம் இருந்ததை உற்று நோக்கியதால் இலங்கை தமிழரசு கட்சியில் ஆயுள்கால உறுப்பினராக இணைந்து கடந்த 2006 ஏப்ரல் மாதம் இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலில் முதன் முதலாக இலங்கை தமிழரசு கட்சியில் வேட்பாளாரா களம் இறங்கி வெற்றி பெற்று நாவிதன்வெளி பிரதேச சபை உபதவிசாளராய் தெரிவானார்.

2008 செம்டெம்பர் மாதம் தவிசாளராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு இடம்பெற்ற பிரதேசசபை தேர்தலில் அதிகூடிய வாக்குகளை இலங்கை தமிழரசு கட்சியில் பெற்று மீண்டும் தவிசாளராக தெரிவானார்.

இலங்கை தமிழரசு கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக கடந்த 2012ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பதவியில் உள்ளார்.

2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றபோது தவிசாளர் பதவியை விட்டு விலகி கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார்.

2015ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக களம் இறங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அதிகப்படியான வாக்குகளை பெற்றுக்கொடுத்த போதும் மிக சொற்ப விருப்பு வாக்குகளால் இவர் வெற்றி பெறாவிட்டாலும் க.கோடீஷ்வரன் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகுவதற்கு இவரின் பங்களிப்பு பலமாக அம்பாறையில் இருந்தது.

2020 ஆகஸ்ட் 5ஆம் திகதி இடம்பெற்ற பொதுத்தேர்தலில் இவரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா விடாப்பிடியாக வேண்டுகோள் விடுத்தபோது தமது தவிசாளர் பதவியை உபதவிசாளருக்கு ஒப்படைத்துவிட்டு இந்த தேர்தலில் களம் இறங்கிய போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆசனத்தை கைப்பற்றவில்லை.

இருந்தபோதும் பெருமளவான வாக்குகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்தது. எனினும் அம்பாறை மாட்டத்திற்கு எந்தவொரு தமிழ் பிரதிநித்துவமும் கிடைக்காமல் போனது.

இதனை உணர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை அம்பாறை மாவட்டத்தின் தமிழ் இன பிரதிநித்துவத்தை காப்பாற்றும் விதமாக தவராசா கலையரனுக்கு தேசிய பட்டியல் ஆசனம் வழங்கியது.

மும்மொழி அறிவு, பட்டம், பதவி என தராதரங்களை பட்டியல் இடும் நம்மத்தியல் தமிழ் தேசியத்தை அம்பாறை தமிழ் மண்ணில் ஆளுமையுடனும், அனுபவ திறனுடனும் ஆற்றல் உடனும், துணிவுடனும் பற்றுறிதியுடனும் கொள்கை தவறாமல் சோரம் போகாமல் தடம் மாறாமல் கட்டிக்காத்த பெரும் தகமை தமிழ் தேசிய அரசியலில் இவருக்கு உண்டு.

இதுதான் உண்மையான நேர்மையான அரசியல் தகமையாகும் என்பதற்கு கலையரசனின் கடந்த கால வரலாறு பலருக்கு படிப்பினையாகும்.

இக்கட்டான உயிர் அச்சுறுத்தல் காலத்தில் கலையரசன் போன்றோர் அம்பாறை மாவட்டத்தில் துணிந்து முகம் கொடுக்காவிட்டால் இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ் தேசிய அரசியல் மௌனிக்கப்பட்டிருக்கும்.

இந்த உண்மையை விளங்கி கொள்வது எல்லோரின் கடமையாகும்.

அச்சுறுத்தல், உயிராபத்து

2006, மாவிலையாற்றில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் போர் ஆரம்பித்த பின்பு கிழக்கு மாகாணத்தில் பல இன்னல்களும் அவலங்களும் ஏற்பட்ட காலம்.

தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாமனிதர்களான ஜோசப்பரராசசிங்கம், ரவிராஜ், சிவநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு, கிழக்கு பல்கலைக்கழக விவசாயபீட பேராசிரியர் ரவிந்திரநாத், தமிழர் புனர்வாழ்வுக்கழக பிறேமினி உட்பட ஏழு தொண்டர்கள், ஊடகவியலாளர்களான மாமனிதர் சிவராம், நாட்டுப்பற்றாளர் நடேசன் உட்பட பலர் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்களால் கொலை செய்யப்பட்ட காலம்.

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக அப்போது இருந்த நான் (பா.அரியநேத்திரன்) கனகசபை ஐயா, தங்கேஷ்வரி அக்கா, ஜெயானந்த மூர்த்தி ஆகியோரின் உறவினர்களை கடத்தி வைத்த காலம்.

தவராசா கலையரசனையும் அவரின் குடும்பத்தையும் இலக்கு வைத்து தமிழ் ஆயுத ஒட்டுக்குழுக்கள் வலை விரித்த போது பல கஷ்டங்களை எதிர்கொண்டு வீட்டை விட்டு மறைவு வாழ்வு வாழ்ந்தார்.

2006 ஏப்ரல் 13ஆம் திகதி நாவிதன்வெளி பிரதேசசபை உறுப்பினராக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கமல்ராஜ் என்பவர் மோட்டார் சைக்கிளில் செல்லும்போது தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அன்றைய தினம் இரவு கலையரசனின் வீட்டுக்கு சென்ற ஆயுதகுழுவினர் கலையரசனை தேடியபோது அவர் மயிர் இழையில் உயிர் தப்பினார்.

22 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாது கொழும்பில் முடக்கப்பட்ட காலம்.

அந்த காலத்தில் கலையரசன் உட்பட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த எமது கட்சி பற்றாளர்கள் பலருக்கு இப்படியான உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

இதனை அறிந்த நாம் அவர்களை இரகசியமாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து கொழும்புக்கு அழைத்து சென்று எம்முடன் நாடாளுமன்ற மாதிவெல உறுப்பினர்கள் விடுதியில் தங்க வைத்து பாதுகாத்தோம்.

2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இவரை இலக்குவைத்து தாக்குதல் நடத்த தமிழ் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் முயன்றபோதும் அவரை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவரை அழைத்து பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

பலர் ஓடி ஒழிந்தபோது உயிரை பணயம் வைத்து எம்முடன் இணைந்து தமிழ் தேசியத்திற்காய் செயல்பட்டவர் கலையரன் என்பதை கூறுவதில் பெருமை கொள்கிறேன்.

சொத்துக்கள் இழப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியலில் கலையரன் உறுதியுடன் உண்மையாக செயல்பட்டமையால் தமது பொருளாதாரத்தில் பெரும்பங்கை இழந்தார்.

தமது சொத்துக்களையும், சுகத்தையும் பாராமல் தமிழ் தேசியத்தின் கொள்கைக்காக பற்றுறிதியுடன் சோரம் போகாமல் பயணிக்கும் நேரிய தமிழன் தவராசா கலையரசனுக்கு அம்பாறை தமிழ் மக்கள் சார்பாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டமை காலம் கடந்த ஒன்றாக இருந்தாலும் பொருத்தமான ஒருவருக்கு வழங்கப்பட்டதையிட்டு மனதார பாராட்டுவோம்.

அவரின் சேவை அம்பாறை மண்ணுக்கும் வடக்கு, கிழக்கு தமிழ்தேசியத்திற்கும் உறுதியுடன் செயல்பட வாழ்த்துவோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.