கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் இழந்துள்ளதற்கு முக்கிய காரணம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் குறிப்பிட்ட இனங்களின், தேசியத்தின் நலன் என்பதை விட சொந்தக் கட்சிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மருந்தாகவே உள்ளது என கட்டுரையாளர் தயாளன் தெரிவித்துள்ளார்.

நிகழ்கால அரசிய நிலைமைகள் தொடர்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையிலே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது,

தேசியப் பட்டியல் உறுப்பினர் என்ற விடயம் குறிப்பிட்ட இனங்களின், தேசியத்தின் நலன் என்பதை விட சொந்தக் கட்சிகளின் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் மருந்தாகவே உள்ளது.

இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியாக இருந்தாலும் சரி.

குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை தலைமைக்குக் குழி பறிக்கும் வாய்ப்பாகக் கருதுகின்றனர் சுமந்திரனும் , சிறீதரனும்.

2020 இலிருந்து 'சுமந்திர ஜனநாயகம்' என்பது அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

`சுத்தனெனத் தன்னைச் சொல்லிவரும் சுமந்திரன் , “கட்சியின் தலைமை மிகமோசமாகத் தோற்றுவிட்டது. அதனை அகற்றியே ஆகவேண்டும்.” என்ற நிலைப்பாட்டில் தலைகீழாக உள்ளார்.

2004 இல் 75 கள்ள வாக்குப் போட்டதாக கூறும் சிறீதரனும் தமது கட்சிக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளதே எனக் கண்ணீர் வடிக்கிறார். அவரும் தலைமையை மாற்ற வேண்டும் என அடம்பிடிக்கிறார். தான் தலைமையை ஏற்கத் தயார் எனவும் அறிக்கை விடுகிறார்.

மாவையின் ஆளுமை எந்தளவு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவரது வரலாற்றை ஆராய்ந்தால் காசி ஆனந்தனுக்கு அடுத்தபடியாக அவரது பெயரே உச்சரிக்கப்பட்டது.

தந்தை செல்வா முதற்கொண்டு பிரபாகரன் முதலானோருடன் தொடர்புபட்டவர். கொழும்பு நாலாம் மாடி முதல் மட்டக்களப்பு முதலான சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டவர்.

இலங்கை அரசியலில் தந்தை செல்வா, ஜீ. ஜீ, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் மட்டுமல்ல சம்பந்தன் ஐயாவும் இரு தடவைகள் தோற்றவர்தான். அதனைச் சுமந்திரனின் மொழியில் சொன்னால் மிக மோசமான தோல்வி எனச் சொல்லலாம்.

கடந்த 2020 பொதுத்தேர்தல் , 1981 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலை நினைவூட்டுகிறது. இதன் முடிவுகளை விலாவாரியாக எழுத முற்பட்டால் நாங்கள் ஆயிரம் கோடி பெறுமதிமிக்க மனிதர்களாக உயர்ந்து விடுவோம்.

அவ்வளவு தொகை நஷ்டஈடு கேட்பதென்றால் அத்தகைய பெறுமதியைக் கட்டக்கூடியவராக எழுதுபவர் இருக்கிறார் என்பதே அர்த்தம். அதுவும் ஒருவகை கௌரவம்தான்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பிரதிநிதித்துவம் இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் சுமந்திரனே என அறுதியிட்டுக் கூறலாம்.

கல்முனை உபபிரதேசச் செயலகத்தைத் தரமுயர்த்தும் விவகாரம் தமிழரைப் பொறுத்தவரை ஓர் உணர்வுபூர்வமான விடயம். இது சாகும் வரை உண்ணாவிரதம் என்றளவுக்குப் போனது. “திருமண வீடென்றால் தான்தான் மாப்பிள்ளை, சாவீடென்றால் தான்தான் பிணம்” என்ற நினைப்பிலுள்ள சுமந்திரன்.

குறிப்பிட்ட சில நாட்களுக்குள் இப்பிரச்னைக்குத் தீர்வு வழங்கப்படும் எனப் பிரதமர் ரணிலின் சார்பில் உறுதிமொழி வழங்கினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. இவ்வாறான உறுதிமொழியை அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒருவரே பிரதமரின் சார்பில் வழங்கியிருக்க வேண்டும். முஸ்லிம் காங்கிரஸ் இப்பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை எதிர்க்கிறது.

அக் கட்சியின் ஹாரிஸ் எம்.பி, போராட்டம் நடத்தியோருக்கு சுமந்திரன் வழங்கிய உறுதிமொழி குறித்து ரணிலிடம் விசாரித்தார். ரணில் அவ்வாறான நிலைப்பாடு எதனையும் தாம் எடுக்கவில்லை எனக்குறிப்பிட்டார். எதிர்பார்த்தபடி எதுவுமே நடக்கவில்லை.

விளைவு என்னவாகும்? சுமந்திரன் என்பவரைத் தனிமனிதனாகவா மக்கள் கருதுவர்? அதனால், வடக்குத் தலைமை தங்களை ஏமாற்றி விட்டது என்றனர், கிழக்குத் தேசியம் குறித்து பரப்புரை செய்வோர். அவர்கள் வாய்களுக்கு அவல் கிடைத்து விட்டது"

கருணா முஸ்லிம்களுக்கு எதிராகப் பேசினார். கிழக்குத் தேசியம் பேசுவோர் வடக்குத் தலைமையின் துரோகம் பற்றிப் பேசினர். முடிவு தேர்தலில் எதிரொலித்தது. பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது. அதிலும் கூட்டமைப்பைவிடக் கருணா கூடுதல் வாக்குகள் பெற்றார்.

எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் இந்நிலைமை எதிரொலிக்கும். கருணாவின் துரோகம் மறக்கப்பட்ட விவகாரமாக மாறிவிட்டது. ஆனால் எதுவும் நடக்காதது மாதிரி மாவையால்தான் கட்சிக்குத் தோல்வி என்கிறார் சுமந்திரன்.

அதுமட்டுமல்லாது தேசியப் பட்டியல் ஆசனம் கனடா வரவு குகதாசனுக்கே வழங்க வேண்டும் என சிறீதரனும் , சுமந்திரனும் கட்சித் தலைமையிடம் குறிப்பிட்டனர் என்று காலைக்கதிர் செய்தி வெளியிட்டது.

அதேநாள் துணைச் செயலாளர் சீ. வீ. கே. சிவஞானம் முதலானோர் கட்சித் தலைமைக்கே இதனை வழங்க வேண்டுமென சம்பந்தன் ஐயாவிடம் வேண்டினர்.

புளொட் தலைவர் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் ஆகியோரும் மாவையையே தேசியப் பட்டியல் உறுப்பினராக்க வேண்டும் என்றனர். இதை அறிந்ததும் சிறீதரனும், சுமந்திரனும் தோசையை திருப்பிப் போட்டனர் என நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அம்பாறையின் கலையரசனுக்கு இந்த ஆசனம் வழங்கப்பட்டதாகச் செயலர் அறிவித்தார். மரியாதைக்கேனும் தமிழரசின் தலைவரிடம் அவர் இவ்விடயத்தைத் தெரிவிக்கவில்லை என அறியமுடிகிறது. மொத்தம் மூவர் இக்கூத்தில் தொடர்புபட்டனர்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. மாவை வரக்கூடாது என்பதற்காகவே திடீரென கலையரசனின் நாமத்தைக் குறிப்பிட்டார்களே தவிர, சுமந்திரன் செய்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய அல்ல.

உண்மையில் ஓர் இனத்தின் தலைமைக்குரிய பண்பை சம்பந்தன் ஐயா எப்படி வெளிப்படுத்தியிருக்க வேண்டும்?

சிவஞானத்தின் முன்பாகவே அம்பாறை மாவட்டத்துக்கு தேசியப் பட்டியல் நியமனம் வழங்கப்பட வேண்டிய அவசியம் பற்றி சித்தார்த்தனுக்கும், செல்வத்துக்கும் விளக்கியிருக்க வேண்டும். அப்படியானால் மாவைக்கு வழங்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பாக அவர் என்ன செய்திருக்க வேண்டும் என்ற வினா எழுகிறது.

மாவை சேனாதிராஜா நாடாளுமன்றத்திலிருந்து கௌரவமாக விடைபெறும் வாய்ப்பை வழங்கியிருக்க வேண்டும். அம்பாறைப் பிரதிநிதியை முற்கூட்டியே சக எம்.பிக்களுக்கு அறிமுகப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.

நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் எடுத்துவிட்டு உரையாற்றும்போது “தமிழர்களின் அடிநாதக் கோரிக்கையான வட,கிழக்கு கோரிக்கையை இப்போதும் நான் வலியுறுத்துகிறேன்.

உணர்வால் வடக்கு - கிழக்கு மக்கள் ஒன்றுபட்டவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது இடத்துக்கு அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இன்னார் (பெயரைக் குறிப்பிடலாம்) பதவியேற்பார்”, எனக் குறிப்பிட்டு விட்டு வெளியேறலாம்.

தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கோ, நாடாளுமன்றத் செயலாளர் நாயகத்துக்கோ அனுப்புவதுடன் தேர்தல்கள் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப ஏற்பாடு செய்திருக்கலாம்.

ஒரு மூத்த அரசியல் தலைவர் என்ற வகையில், இவர் சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து விடைபெறும் தருணம் நெகிழ்ச்சியாக இருந்திருக்கும். வடக்கு - கிழக்கு இணைப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கும் சக்திகளுக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும். கௌரவமாக வழியனுப்பி வைப்பது என்பது சூதும் வஞ்சகமும் நிறைந்த சுமந்திரனுக்கு பழக்கமில்லாததுதானே.

இன அழிப்பு தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றியமைக்காக வடக்கு முதல்வருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர ஏற்பாடு செய்தவர்தானே இவர். அது மட்டுமல்லாது டெனீஸ்வரனைக் தூண்டிவிட்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரை குற்றவாளி கூண்டில் நிற்க வைத்தவர்தானே?

அவரைப் பொறுத்தவரை தான்தான் குரங்காட்டி. தான்சொல்வது போல் இந்தக் குரங்குகள் பாய வேண்டும், குத்துக்கரணம் அடிக்கவேண்டும். நாளை தனக்கும் எதுவும் நடக்கலாம் என்பதை இன்று சிறீதரன் உணரவேண்டும்.

பதவி ஏற்ற அன்றே இராஜினாமாச் செய்வதென்ற விடயம் இலங்கைக்குப் புதியதொன்றல்ல. பிரதம நீதியரசராகக் கடமையாற்றிய சிராணி பண்டாரநாயக்க காலையில் பதவியேற்று மாலையில் இராஜினாமாச் செய்து “கௌரவமாக விடைபெறுதல்” என்றதற்கு உதாரணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருந்தாலும் தமிழினத்தின் சரியான தலைவர் என்று எல்லோரும் பாராட்டக்கூடிய ஒரு சந்தர்ப்பத்தை சம்பந்தன் ஐயா போட்டுடைத்துவிட்டார். ஒருவேளை மாவை ராஜினாமா செய்யாவிட்டால் என்றொரு கேள்வியும் எழலாம். அதுவும் நியாயமானதே.

"பதவியைத் துறக்க தயார் தயார் என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமே ஒழிய ஒருபோதும் துறந்து விடக்கூடாது”, என அமிர்தலிங்கம் தன்னிடம் கூறினார் என்று பிரபாகரன் ஒரு போராளியிடம் தெரிவித்தார்.

(அந்த முன்னாள் போராளி இன்னமும் உயிருடன் உள்ளார்) மாவை எவ்வாறு உரையாற்றப் போகிறார் என்ற விடயத்தை மட்டும் தவிர்த்து விட்டு ராஜினாமா செய்வார் என்பதை மட்டும் ஊடகங்களுக்குத் தெரிவித்திருக்கலாம் .

கடந்தமுறை 58,043 வாக்குகள் பெற்ற சுமந்திரன் இம்முறை இரட்டிப்பாக வாக்குப் பெறுவேன் என மார்தட்டினார். அவருக்கு 27,834 வாக்குகளே கிடைத்தன. அதாவது அரைவாசிக்கும் குறைவு. கடந்தமுறை மருதனார்மடம் கூட்டத்தில் எனது தலைவர் பிரபாகரனே என சம்பந்தர் முன்னிலையில் கூறினார் சிறீதரன்.

அத் தேர்தலில் 72,058 வாக்குகள் பெற்றார். இம்முறை சுமந்திரன் எமக்குத் தேவை என்றார். முதல் கிடைத்ததில் அரைப்பங்கு கூடக் கிடைக்கவில்லை. (35,884 வாக்குகள்) இந்த வாக்குகள்கூட பெரும்பாலும் தீபன், ஹில்மனை நினைத்தே போடப்பட்டன.

சிறீதரனின் துணைவியார், மாமனார்கூட சுமந்திரனுக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். பொதுவாக மாவீரர், முன்னாள் போராளிகளின் நிலைப்பாடு அப்படியாகவே இருந்தது.

எனவே, கிளிநொச்சியில் என்ன நடந்தது என்பதை ஆராயாமலே விடுவோம். முடிவில் சிறீதரன், சுமந்திரன் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்றனர் என அறிவிக்கப்பட்டது.

1981 மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலின்போது அமைச்சர்கள் காமினி திஸநாயக்கா, சிறில் மத்தியூ ஆகியோர் யாழ். சுபாஸ் ஹோட்டலில் தங்கியிருந்தனர். வாக்குப் பெட்டிகள் இந்த ஹோட்டலுக்குக் கொண்டு செல்லப்பட்டன. கட்டுக் கட்டாக வாக்குகள் போடப்பட்டன.

சில கட்டுக்களில் 'றபர் பாண்ட்' கூட கழற்றப்படவில்லை. இந்தத் தேர்தல் மோசடியாக நடத்தப்பட்டது என இரு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. உடனே ஜே. ஆர். 10 ஆசனங்ளையும் உங்களுக்கே தருகிறோம் என்றார்.

மகிழ்ச்சியுடன் திரும்பினர் கூட்டணியினர். நீதிமன்றில் தேர்தல் நீதியாக நடத்தப்பட்டது என சத்தியக் கடதாசி தாக்கல் செய்தனர். இறுதியில் எனக்குக் கிடைத்தது இந்த மேசை ஒன்றுதான் என சபைத் தலைவர் நடராசா கூறினார்.

அன்றும் தமிழ்த் தலைமை ஜனநாயகத்தை தூக்கில் தொங்க விட்டது. ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் சாட்சியத்தைப் பதிவு செய்த விசாரணை அதிகாரி ஓய்வு பெற்ற பின் தனது மனசாட்சி உறுத்துகிறது. நான் பிழையாக நடந்துகொண்டேன் என ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி திருமலையில் 2,745, மட்டக்களப்பில் 1,203,அம்பாறையில் 283 வாக்குகளைப் பெற்றது. இந்த வாக்குகள் கிடைத்திருக்காவிடில் தேசியப் பட்டியல் ஆசனம் கிடைத்திருக்காது. பெயரில்தான் தேசியம் உள்ளது. இவர்கள் சிந்தனை எல்லாம் குடாநாட்டுக்குள்தான் போலும்.

தேசியப் பட்டியல் விவகாரத்தில் சரியான முடிவெடுத்த அதேவேளை மாவையின் கௌரவமும் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும்.

கட்சி ரீதியிலான எந்த முடிவு எடுக்கும்போதும் , கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளவேண்டும். அது மட்டுமல்லாமல் கிழக்குத் தேசியம் பேசுவோரின் கருத்துக்களை முறியடிக்கும் வகையிலும் அந்த நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.