19ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலையான கொள்கை இதுவரை வெளியாகவில்லை

Report Print Ajith Ajith in அரசியல்

சுயாதீன ஆணைக்குழுக்களை கொண்டு வந்த 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் இலங்கை இந்திய உடன்பாட்டை தந்த 13ஆவது திருத்தம் என்பன தொடர்பில் அரசாங்கத்தின் நிலையான கொள்கை இன்னும் வெளியாகவில்லை.

பல்வேறு கட்டங்களிலும் பலரும் இந்த திருத்தங்களை பற்றி முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

முன்னதாக 19ஆவது திருத்தத்தை முற்றாக நீக்கப்போவதாகவும் அதற்கு மூன்றில் இரண்டு ஆணை தேவை என்றும் பொதுஜன பெரமுன தேர்தலின்போது கோரிக்கைகளை முன்வைத்திருந்தது.

எனினும் இந்தியாவுடன் தொடர்புடைய 13ஆவது திருத்தம் தொடர்பில் தேர்தலின்போது அதிகளவில் பேசப்படவில்லை.

இந்தநிலையில் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சிக்கு வந்துள்ள பொதுஜன பெரமுன தற்போது இந்த திருத்தங்கள் தொடர்பில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகிறது.

19ஐ முற்றாக நீக்கப்போவதாக கூறிய பொதுஜன பெரமுன தற்போது அந்த திருத்தத்தில் உள்ள சிறந்த விடயங்களை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொண்டு ஏனையவற்றை நீக்கும் வகையில் 20ஆவது திருத்தத்தை கொண்டு வரப்போவதாக கூறியுள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை 13ஆவது திருத்தம் தொடர்பில் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரான மஹிந்தாநந்த அலுத்கமகே வடக்கு, கிழக்குக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்ளை வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மாகாணசபைகள் அமைச்சர் சரத் வீரசேகர 13ஆவது திருத்தத்தில் உள்ள நாட்டுக்கு பாதகமான சரத்துக்களை நீக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பொலிஸ் காணி அதிகாரங்களை வழங்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலையான கொள்கைகள் தொடர்பில் தெரிந்து கொள்ள இன்னும் காலம் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.