கலையரசனின் தேசியப்பட்டியலை தடுப்பதற்கு கடைசி நிமிடம் வரை போராடிய சில வெளிநாட்டவர்கள்

Report Print Gokulan Gokulan in அரசியல்

அம்பாறை தமிழ் மக்கள் தமக்கு கிடைத்திருக்கு ஒரேயொரு நாடாளுமன்ற ஆசனத்தை தாரைவார்க்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென ரஞ்சித் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சிக்குல் தேசியப்பட்டியல் தொடர்பில் எழுந்துள்ள மோதல்கள் தொடர்பில் அவர் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2020 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் நிலத்திலும், புலத்திலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது என்பது பழைய செய்தி.

இதில் ஆராயப்படத்தக்க விடயம் என்னவெனில், பல மனிதர்கள் (பிரமுகர்கள் ) ஆடிவரும், இரட்டை ஆட்டங்களும் (Double game), நழுவல் ஆட்டங்களும் (Slipshot) ஆகும். இதில் புலம்பெயர்ந்து வாழும் சில முன்னாள் போராளிகளும் உள்ளடங்கியது வேதனையளிக்கும் ஒன்றாக உள்ளது.

"மாவை ஐயா பாவம்"

"மாவை ஐயா பாவம், தேசியப்பட்டியல் ஆசனம் அவருக்குத்தான் கொடுத்திருக்க வேண்டுமென" என பலரும் என் காது பட பேசிக்கொண்டிருக்கின்றனர். இக்கூற்றில் உள்ள சரி, பிழையை நான் வாதிட விரும்பவில்லை.

ஆனால் தேர்தல் தினமான 05/08/2020 நாளுக்கு முன்பாக இவர்களை எப்படியாவது வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு சைக்கிள், மீன், மொட்டு, தொலைபேசி, வீணை என ஏனைய கட்சிகளை ஆதரித்து வந்தவர்கள் மாகை ஐயா மீது திடீர் காதல் கொள்ள காரணம் என்ன?அவர்களே கூறுகின்றார்கள்.

இன்றைய கரிசனைக்கு நிகரான கரிசனை தேர்தலிற்கு முன்னர் இன்று கதைக்கும் அத்தனை நபர்களிற்கும் இருந்திருக்குமாக இருந்தால் இன்று மாவை ஐயா பாராளுமன்ற உறுப்பினர்.

சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக மாவை ஐயா தலைமையில் தொடர வேண்டும் அப்படி என்றால் அவர் ஒரு MP ஆக இருக்க வேண்டும். எனவே தேசியப் பட்டியல் ஆசனம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

அழகான நிறுவல்தான்! ஆனால் உட்கிடைக்கை அதுவல்ல. அம்பாறை்கு ஆசனம் போகக்கூடாது என்பதுதான் கண்ணுக்குத் தெரியாத காரணம்.

ஒழுக்காற்று நடவடிக்கை

"ஒழுக்காற்று நடவடிக்கை " இந்தச் சொல்லை நம்மில் அநேகர் கேள்விப்பட்டுள்ளோம். குறிப்பாக, முன்னாள்போராளிள் நன்கு அறிவார்கள் . தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு பெயர் போனது.

அடிமட்டப் போராளியிலிருந்து உயர்நிலை தளபதி வரை யாரும் இதற்கு தப்ப முடியாது. இதில் பெரிய விடயம் ஒன்றும் இல்கல தண்டனை வழங்குபவரின் கரங்கள் எப்போதும் சுத்தமாக இருந்தது.

"உங்களில் குற்றம் இல்லாதவன் முதல் கல்லை எறியுங்ள் " என்ற வேத வாக்கியத்தை கூட்டமைப்பிலுள்ள பலர்அறிவார்கள்.

அப்படியானால் கூட்டமைப்பின் ஒழுங்கு மீறப்படும் சந்தர்ப்பத்தில், முதல் கல்லை எறியும் திராணி யாருக்கு உள்ளது, அதற்கு தகுதியானவர்களே தீர்மானிக்கட்டும்.

அந்த வகையில் ஒழுக்காற்று நடவடிக்கைகளின் நடைமுறையை நன்கு அறிந்த மாவை ஐயா அதனை திறம்பட செயற்படுத்தி போடாட்டத்தின் தியாகத்திற்கு தகுந்த பதில் வழங்குவார்.

சாலமோனின் சபையில் போலித்தாய்

அம்பாறைக்கு கொடுக்கப்பட்ட ஆசனம், இடை நிறுத்தப்படுகிறது என செய்திகள் வந்தபோது ,சிலஅம்பாறை நண்பர்களுடன் தொடர்பு கொண்டு ஏதாவது சமரசம் செய்து , உங்கள் மாவட்டத்திற்கான ஆசனத்தை தக்க வையுங்கள் என்று கோரினேன்.

அதற்கு அவர்களில் சிலர் சொன்ன பதில் என்னை தூக்கி வாரிப்போட்டது. அவர்கள் சொன்னார்கள்,மாவை ஐயா பாவம்" என்று. ஆனால் இவர்களின் உள்நோக்கம் வேறாக இருந்தது.அதுதான் "கலையரசன் வரக்கூடாது" என்பதாகும்.

அம்பாறை மாவட்டத்தில், வீட்டுச்சின்னத்தில் கலையரசனுடன் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்களின் ஆதரவாளர்களாம் இவர்கள்.

தமிழர் தாயகத்தின் ஒட்டுமொத்த பரிசாக அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட இந்த ஆசனத்தை தனிப்பட்ட போட்டி மனப்பாங்கிற்காக அம்பாறை மக்களிடமிருந்து பிரித்தெடுத்து திருப்பி அனுப்ப நினைக்கும் இவர்கள் , பிள்ளையை பாதியாக பிரித்துக்கேட்ட சாலமோன் சபையின் போலித்தாயை விட மோசமானவர்கள்.

கூட்டணி தர்மம்

"கொடுத்தது பிரச்சினை இல்லை.கொடுத்த முறைதான் பிரச்சினை " என்று தமிழரசுக் கட்சியின் கூட்டணி கட்சிகளான டெலோவும் (TELO),புளொட்டும் (PLOTE) கொதித்தெழுந்துள்ளன.

குறித்த கட்சித்தலைமைகளின் ஆட்சேபனைகளும், அந்த கட்சிகளின் அனைத்துலக பிரதானிகளின் எதிர்ப்புணர்வும் தமிழ் ஊடகங்களினால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கூட்டணி தர்மத்தை தக்கவைப்பதற்கான இவர்களின் உரிமை முழக்கம் மெய் சிலிர்க்க வைக்கின்றது. இருந்தாலும் ஒரு நெருடல்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாரிஸ் நகரில் நடைபெற்றிருந்த இரண்டு சம்பவங்களை மட்டும் நினைவூட்ட விரும்புகின்றேன்.

சம்பவம் 01 : தமிழர் கலாச்சார நிகழ்வொன்றில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கலந்து கொண்டிருந்த போது அங்கு அவரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருந்ததுடன், அந்நிகழ்வும் குழப்பியடிக்கப்பட்டிருந்தது.

சம்பவம் 02 : இதே பாரிஸின் லா சாப்பல் பகுதியில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சந்திப்பு நிகழ்வுக்கு வருகை தந்திருந்த ரெலோ அமைப்பின்முக்கியஸ்தரான ஜனாவை இலக்கு வைத்து தாக்குதல் முயற்சி ஒன்று நடத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிரெஞ்சுப் பொலிஸார், ரெலோ பிரதிநிதிகளை பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருந்தனர்.

இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பிலும் TNA யினாலோ அதன் அங்கத்துவ கட்சி ஒன்றினாலோ இதுவரை எந்தவொரு கண்டன அறிக்கையும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எங்கே ஐயா போனது உங்களது கூட்டணித் தர்மம்? முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பார்கள் . இப்போது அம்பாறை மக்களுக்கு ஆசனம் வழங்கப்பட்ட விடயத்தில்தான், கூட்டணி தர்மம் இவர்களின் புத்திக்கு எட்டியுள்ளதா?

கலையரசனின் கடமைகள்

யார் செய்த தவப்பலனோ தெரியாது.. ஏதோ ஒரு வழியாக அம்பாறை தமிழ் மக்களுக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது. இச் சந்தர்ப்பத்தை மிகச் சரியாகவும் உச்சமாகவும் ப்யன்படுத்த வேண்டிய கட்டாயம் கலையரசனுக்கு உள்ளது.

அம்பாறையில் இப்போது பேரினவாதத்தின் முகவர்களும், அரசியல் சண்டியர்களும் களமிறங்கியுள்ளனர். இவர்களை உரிய முறையில் எதிர்கொள்ள தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதியுள்ள, துணிவுள்ள ஒருவரே தேவை .

திரு.கலையரசன் தான் இதற்குத் தகுதியானவர் என்வதனை எண்பித்துக்காட்ட வேண்டிய தருணம் இது.

வெற்றி, தோல்வியை கண்டுக்காமல் தமிழ்த் தேசியத்திற்காக அம்பாறையில் களமிறங்கிய அனைத்து வேட்பாளர்களும் மதிபிற்குரியவர்களே!

அம்பாறை மக்களும், தமக்காக தமிழ்த் தலைமைகள் ஒன்றிணைந்து பரிசளித்த ஒரேயொரு ஆசனத்தை போட்டி, பொறாமைகளுக்கு குருதட்சணையாக வழங்கி விடாமல், மிகக் கவனமாய் காய் நகரத்த வேண்டியுள்ளது எனக் கூறியுள்ளார்.