ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளாக மாற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மாத்திரம் போதாது

Report Print Steephen Steephen in அரசியல்
537Shares

புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வரும் போது, 19வது திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஷரத்துக்களை மாற்ற வேண்டுமாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய தேவை இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளரும் கல்விமைச்சருமான ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் செய்யக் கூடிய திருத்தங்களை மாத்திரம் புதிய அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் ஊடாக செய்ய உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதியின் பதவிகாலமானது 19வது திருத்தச் சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்னர் ஆறு ஆண்டுகளாக இருந்தது. தற்போது ஐந்தாண்டுகள் என்ற ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மீண்டும் ஆறு ஆண்டுகளாக மாற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மாத்திரம் போதுமானதல்ல, சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும். தேர்தல் காரணமாக சோர்வடைந்துள்ள மக்களுக்கு மீண்டும் சர்வஜன வாக்கெடுப்பை வழங்க அரசாங்கம் எண்ணவில்லை.

இதன் காரணமாக ஜனாதிபதியின் பதவி காலம் 5 ஆண்டுகளாகவும் ஜனாதிபதி ஒருவர் இரண்டு முறை மாத்திரமே மக்களால் தெரிவு செய்யப்பட முடியும் என்ற ஷரத்துக்கள் அப்படியே அமுல்படுத்தப்படும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்துறை பேராசிரியரான ஜீ.எல்.பீரிஸ், அரசியலமைப்புச் சட்ட நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.