சம அளவில் விருப்பு வாக்குகளை பெற்ற இரு வேட்பாளர்கள் - புதிய உறுப்பினரை தெரிவு செய்வதில் சிக்கல்

Report Print Steephen Steephen in அரசியல்
215Shares

இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பிரேமலால் ஜயசேகரவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோனால்,அவரது வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினரை துண்டு சீட்டை குலுக்கி போட்டு தெரிவு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் அடுத்த இடத்தில் சமநிலையான விருப்பு வாக்குகளை பெற்ற இரண்டு பேர் இருக்கின்றனர்.

சனி ரோஹன கொடித்துவக்கு மற்றும் ரஞ்சித் பண்டார ஆகிய வேட்பாளர்கள் தலா 53 ஆயிரத்து 261 விருப்புகளை பெற்றுள்ளனர்.

இவர்களில் ஒருவரை தெரிவு செய்ய துண்டுச் சீட்டில் பெயர்களை எழுதி குலுக்கி போட வேண்டும் அல்லது நாணயம் சுழற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வரலாற்றில் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்ய இதுவரை இப்படியான நடைமுறை பின்பற்றப்பட்டதில்லை.

கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு வர முடியாது என சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். எனினும் ஜயசேகர நாடாளுமன்றத்திற்கு வர முடியும் என சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.