20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக செய்ய வேண்டியதை சுட்டிக்காட்டும் கல்வி அமைச்சர்

Report Print Gokulan Gokulan in அரசியல்
147Shares

இலங்கை அரசியல் அமைப்பின் 19ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து 20ஆவது திருத்தத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக, இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சர் பேராசிரியல் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

19ஆவது திருத்தத்தின் ஊடாகவே நாட்டின் ஜனநாயகம், சட்டவாட்சி, அதிகாரப் பரவலாக்கள் உள்ளிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கும் ஒரு தரப்பின் கருத்துகள் ஒரு மாயை என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் அண்மையில் இடம்பெற்ற அரசியல் செயலமர்வு ஒன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

முடிந்தளவு விரைவாக 19ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து 20ஆவது திருத்தத்தை கொண்டுவருவதற்கான கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன.

எனினும் அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். அதற்கு முன்னதாக இதனை முன்வைப்பது அவ்வளவு சிறந்த விடயமாக இருக்குமென நான் நினைக்கவில்லை.

மக்களுக்கு இதுத் தொடர்பிலான புரிதல் அவசியம். 19ஆவது திருத்தத்தின் ஊடாகவே நாட்டின் ஜனநாயகம், சட்டவாட்சி, அதிகாரப் பரவலாக்கள் உள்ளிட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கும் ஒரு தரப்பு, இதனை மாற்றியமைக்க முயல்வது தேசத் துரோக செயல் என்ற வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.

இது உண்மையா என்பது தொடர்பில் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். உண்மையில் 19ஆவது திருத்தம் என்பது ஒரு மாயை. 19ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு எந்தவொரு அமைச்சையும் வைத்துக்கொண்டிருக்க முடியாது.

இந்த திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு பொறுப்பு ஒன்று ஒப்படைக்கப்படுகின்றது எனினும் அவருக்கு அதனை நிறைவேற்றுவதற்கான அதிகாரம் இல்லை. அவ்வாறான நிலையில் நாட்டின் ஜனாதிபதி எவ்வாறு நாட்டின் பாதுபாப்பை உறுதிப்படுத்த முடியும்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு யார் பொறுப்புக்கூறுவது என்ற பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது. கடந்த காலத்தில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் இந்தப் பிரச்சினைக்கு வழி வகுத்தது.

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதாக தெரிவிக்கும் ஒரு தரப்பினர், நாட்டு மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியை விட, சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும், அரசியல் அமைப்புச் சபைக்கும் அதிகளவு அதிகாரங்களை வழங்கியுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.