19 இற்கு அடியோடு முடிவு கட்டுவோம்! மஹிந்த சூளுரை

Report Print Rakesh in அரசியல்
344Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்கத்தின் பிரகாரம் அரசமைப்பின் 19 ஆவது திருத்தத்தை முழுமையாக இல்லாதொழிப்போம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ராஜபக்சக்களை அரசியலில் இருந்து ஒதுக்கும் வகையிலேயே அரசமைப்பின் 19ஆவது திருத்தத்தை நல்லாட்சி அரசு நிறைவேற்றியிருந்தது. இதுதான் உண்மை நிலைவரம்.

இந்தத் திருத்தத்தால் நாடோ அல்லது மக்களோ எவ்வித நன்மையும் அடையவில்லை. மாறாக கடந்த நான்கரை வருடங்களாக நாட்டு மக்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தார்கள். ஊழல், மோசடிகள் தலைவிரித்தாடி நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்துக்குச் சென்றிருந்தது.

இந்த அவலநிலைக்கு முடிவுகட்டவே நாட்டு மக்கள் எமது கையில் மீண்டும் அதிகாரத்தைத் தந்துள்ளார்கள். எனவே, ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய வாக்குறுதிக்கமைய அரசமைப்பின் 19ஆவது திருத்தத்துக்கு முடிவு கட்டியே தீருவோம்.

இந்த நிலைப்பாட்டில் ஜனாதிபதியும் உறுதியாக உள்ளார். அவர் தனது கொள்கை விளக்க உரையில் இதைத் தெளிவாக எடுத்துரைத்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.