மைத்திரிக்கு துணைப் பிரதமர் பதவி? நீதி அமைச்சர் வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in அரசியல்
430Shares

துணைப் பிரதமர் பதவியொன்றை உருவாக்குவது குறித்து இதுவரை கவனம் செலுத்தப்படவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மல்வத்து - அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களின் ஆசியை பெற்றுக்கொள்ள கண்டிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

19வது திருத்தத்தை திருத்துவது குறித்தும், புதிய அரசியலமைப்பு உருவாக்கல் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்துகின்றது.

எனினும், துணைப் பிரதமர் பதவி குறித்தும் இதுவரை யோசனைக்கூட முன்வைக்கப்படவில்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பின் 20வது திருத்தத்தின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு துணைப் பிரதமர் பதவியை வழங்குமாறு அந்த கட்சி அரசாங்கத்திடம் கோரியதாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அரசியலமைப்பின் 18 மற்றும் 19வது திருத்தங்கள் இரத்து செய்யப்பட்ட பின்னர், புதிய 20வது திருத்தத்தின் ஒரு பகுதியாக புதிய பதவியை உருவாக்க முன்மொழியப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 15 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இருவர் அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேர் இராஜாங்க அமைச்சர்கள், துணை சபாநாயகர்கள் மற்றும் இரண்டு துணைக்குழுக்களின் பதவிகளை வகிக்கின்றனர்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதனை அந்த கட்சியின் உறுப்பினர்கள் மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.