19வது திருத்தச் சட்டத்தை ஆதரித்து நிறைவேற்றியவர்களே அதனை எதிர்க்கின்றனர் : லக்ஷ்மன் கிரியெல்ல

Report Print Steephen Steephen in அரசியல்

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை தற்போது எதிர்க்கும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அன்று அந்த திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது, ஐக்கிய தேசியக் கட்சிக்கு 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருந்தனர். இதனால், அன்றைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த தற்போதைய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களின் ஆதரவுடனேயே அது நிறைவேற்றப்பட்டது.

17வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது அப்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த அனைத்து கட்சிகளும் ஆதரவாக வாக்களித்தன. அதனை சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கொண்டு வந்தார்.

மகிந்த ராஜபக்சவும் அதற்கு ஆதரவாக வாக்களித்தார். 17வது திருத்தச் சட்டத்தின் மூலம் முதன் முறையாக அரசியலமைப்பு பேரவைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

எனினும் 17வது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்து 18வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றி, 17வது திருத்தச் சட்டத்திற்கு முன்னர் இருந்த நிலைமையை ஏற்படுத்தி முழு அதிகாரங்களை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தன்வசப்படுத்திக்கொண்டார்.

17வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்தது போல் 19வது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த போதும் நாடாளுமன்றத்தில் அன்று இருந்த அனைவரும் வாக்களித்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 42 உறுப்பினர்களே இருந்தனர். எனினும் எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தது.

19வது திருத்தச் சட்டத்தை விமர்சிக்கும் அனைவரும் அன்று ஆதரவாக வாக்களித்தனர். அவர்கள் ஆதரவாக வாக்களிக்கவில்லை என்றால் எம்மால் அதனை கொண்டு வந்திருக்க முடியாது.

தினேஷ் குணவர்தன ஷரத்திற்கு ஷரத்து திருத்தங்களை கொண்டு வந்தார். வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில திருத்தங்களை கொண்டு வந்தனர்.

இந்த விதத்திலேயே 19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.