ஏற்றுமதி பொருளாதாரத்தை வெற்றிகொள்ளும் இலங்கை : அமைச்சர் விமல் நம்பிக்கை

Report Print Rakesh in அரசியல்

எதிர்காலத்தில் இறக்குமதிகளால் நிறைந்த நாடு என்பதற்கு அப்பால் ஏற்றுமதி பொருளாதாரத்தை வெற்றிக்கொண்ட நாடாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும். அதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளையும் மனித வளத்தையும் விருத்தி செய்வது உட்பட ஏனைய காரணிகள் குறித்து அரசு கவனம் செலுத்தவுள்ளது என கைத்தொழில்துறை அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் அமைச்சில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

கொரோனாவுக்கு முன்னர் தேசிய ஆடை உற்பத்தியாளர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர்களது பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதுடன், அவர்களின் ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்குள்ள தடைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இதற்காக ‘சர்வதேச ரீதியான சாதாரண சந்தை வாய்ப்புகள்’ என்ற தொனிப்பொருளில் இவர்களுக்கு சர்வதேச சந்தை வாய்ப்புகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான விழிப்புணர்களை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தோம்.

மக்களுடைய அரசு என்ற அடிப்படையில் மக்களுக்கான பணிகளைச் செய்வது எமது பொறுப்பு. அதன் பிரகாரம் தேசிய ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஆடை ஏற்றுமதி தொடர்பில் விளக்கமளிப்பது அமைச்சின் பொறுப்பாகும்.

ஏற்றுமதி சபை மற்றும் துறைசார் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி இந்த நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். தேசிய ஆடை உற்பத்தி தொடர்பில் எமது அரசு அதிகூடிய கவனத்தை செலுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.