இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் பதவிகளை வகிக்க சந்தர்ப்பம் வழங்கக் கூடாது! அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

Report Print Steephen Steephen in அரசியல்

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மூலம் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு இலங்கையில் பதவிகளை வகிக்கும் சந்தர்ப்பத்தை வழங்கக் கூடாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நீதியமைச்சர் மொஹமட் அலி சப்றி இந்த சட்டத் திருத்த வரைவை அமைச்சரவையில் தாக்கல் செய்த போதே வாசுதேவ இதனை கூறியுள்ளார்.

எனினும் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் இந்த நிலைப்பாட்டுக்கு அமைச்சரவையில் உள்ள பலர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

அப்போது அமைச்சர் வாசுதேவவின் கருத்தை தெளிவுப்படுத்தியுள்ள அமைச்சர் விமல் வீரவங்ச, ஒரு நபரை இலக்கு வைத்து அல்லாது கொள்கை ரீதியான காரணத்தை முன்வைத்தே அமைச்சர் வாசுதேவ இதனை கூறியதாகவும் இந்தியாவில் கூட இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரச பதவிகளை வகிக்க இடமளிக்கப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்த 20வது திருத்தச்சட்டத்தில் சிறிய குறைகள் காணப்பட்டால், அதற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தை நாடும் என்பதால், திருத்தச் சட்டத்தை தொடர்ந்தும் ஆராய்ந்து அடுத்த அமைச்சரவையில் ஒப்புதல் பெறலாம் என அமைச்சர் உதய கம்மன்பில யோசனை முன்வைத்துள்ளார். இதற்கு அமைச்சரவையில் உள்ள பலர் எதிர்ப்பை முன்வைத்துள்ளனர்.

இதன் காரணமாக 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்கு அன்றைய தினமே ஒப்புதல் வழங்க அமைச்சரவை தீர்மானித்துடன் அன்றைய தினமே அது வர்த்தமானியில் வெளியிட அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.