எனது வளர்ச்சியை கண்டு பயந்து விட்டனர்! சாணக்கியன்

Report Print Kumar in அரசியல்

இரண்டு நாடுகளின் பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எனது வளர்ச்சியை கண்டு பயந்து என்மீதான கூடுதலான பொய்யான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களையெல்லாம் கடந்து தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணியின் முழுமையான ஒத்துழைப்புடன் பொதுமக்களின் ஆதரவுடன் தமிழரசுக்கட்சியின் ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினராக நான் தெரிவு செய்யப்பட்டேன். அதற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

இளைஞர்களின் ஆதரவுகளைப் பெற்றவர்களே இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் பூரண ஆதரவு எனக்கு கிடைத்ததே எனது வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்தது.

வருங்காலத்தில் தமிழ் தேசியத்தினை அடைவதற்கான பல செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம்.

சில கட்சிகள் இளைஞர்களை பொய்கூறி தவறான பாதையில் சென்று அவர்களின் வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் நாங்கள் எந்தவிதமான பொய்யான வாக்குறுதிகளையும் வழங்கவில்லை. தமிழ் தேசியம் என்ற இலக்கினை நோக்கிய செயற்பாடுகளையே நாங்கள் மேற்கொண்டுவந்தோம்.

இந்த அரசாங்கம் 20வது திருத்த சட்டத்தினை மிக அவசரமாக கொண்டுவந்துள்ளது. இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிடலாம் என்ற வகையில் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட நபரை இலக்காக கொண்டு இந்த சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று நான் உணர்கின்றேன். நாங்கள் எந்த சட்டத்தினை எதிர்க்காட்டாலும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.

மத்திய வங்கியின் கொள்ளை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டபோது கூட அதனை இன்றைய அரசாங்கத்தில் உள்ளவர்கள்தான் அது தொடர்பில் அதிகமாக பேசினர். மத்திய வங்கியின் கொள்ளையுடன் தொடர்புபட்டதாக கருதப்படும் அர்ஜுன் மகேந்திரன் என்பவர் சிங்கப்பூரினதும் இலங்கையினதும் பிரஜாவுரிமையினை கொண்டிருந்த காரணத்தினால் அந்த கொள்ளை தொடர்பில் விசாரணை செய்வதற்கு கூட அவரை இலங்கைக்கு கொண்டுவரமுடியாத நிலையே இருக்கின்றது.

எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் ஒருவர் ஏதாவது சிக்கலில் சிக்கும்போது அவர் வேறு ஒரு நாட்டில் இருந்தால் அவரை விசாரணைக்கு கூட இங்கு கொண்டுவர முடியாத நிலையேற்படும். இது தொடர்பில நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.