19 இலுள்ள தடைகளை நீக்கி முன்னோக்கி செல்வதே 20 ஆவது திருத்தத்தின் நோக்கம்

Report Print Rakesh in அரசியல்
32Shares

அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளைக் களைந்து முன்னோக்கிச் செல்வதே 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இதன் முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதே என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், பிரேமலால் ஜயசேக்கர எம்.பியின் விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, "கரு ஜயசூரிய, தலதா அத்துகோரள, சஜித் பிரேமதாஸ ஆகியோர் உள்ளிட்ட அரசமைப்பு பேரவையே தீர்ப்பு வழங்கிய நீதிபதியையும் மேன்முறையீட்டு நீதிபதியையும் நியமித்தது" என்றும் குறிப்பிட்டார்.

இராஜாங்க அமைச்சர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தின் நோக்கம் 19ஆவது திருத்தச் சட்டம் மூலம் விதிக்கப்பட்டுள்ள தடைகளைக் களைந்து முன்னோக்கிச் செல்வதாகும். அனைத்தையும் ஒரே தடவையில் மாற்ற முடியாது. அதற்கு நீண்டகாலம் எடுக்கும். பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

19ஆவது திருத்தச் சட்டத்தின் சில விடயங்களை அவ்வாறே வைத்துக்கொள்ள வேண்டும். முதன்மையான நோக்கம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மாற்றாது எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர பற்றி எதிர்க்கட்சி முன்வைக்கின்ற குற்றச்சாட்டு பற்றி அவதானத்தைச் செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தாமோ அல்லது பிரதமரோ நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எவ்வித தலையீட்டையும் செய்யவில்லை என்று குறிப்பிட்டார்.

"தலையீடு செய்வதாயின் உயர்நீதிமன்றத்திலேயே செய்ய வேண்டி இருந்தது. அவ்வாறானதொரு விடயம் எந்தச் சந்தர்ப்பத்திலும் இடம்பெறவில்லை. நீதிமன்றத் தீர்ப்பை வழங்கிய நீதிபதியை அரசமைப்பு பேரவையே நியமித்தது. எதிர்க்கட்சி பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.