ஜனாதிபதித் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் பெறுமதியான அரச காணிகளை பல்தேசிய நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுடனான சந்திப்பில் எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று, பொதுத் தேர்தலிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ள நிலையில், மக்களுக்கு செய்ய போவதாக கூறிய விடயங்களை நிறைவேற்றுவது மாத்திரமல்ல, அவற்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளனரா என்ற பெரிய கேள்வி உள்ளது.
ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் தற்போதைய அரசாங்கத்தின் பிரதானிகள் சுற்றுச் சூழல் பற்றி பெரிதாக பேசினர். தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்திற்கு வக்காலத்து வாங்கிய சுற்றாடல் ஆர்வலர்கள் தற்போது என்ன கூறுகிறீர்கள்?.
சுற்றுச் சூழலை பாதுகாப்பதாக தேர்தலின் போது கூறினார்கள். காடுகளின் கனத்தை அதிகரிக்க போவதாக கூறினார்கள். காடுகளை அழிக்கும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க போவதாக தெரிவித்தனர். வில்பத்து அழிக்கு காரணமாக பிரதானிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.
இப்படி பேசிய தற்போதைய அரசாங்கத்தின் பிரதானிகள், நாட்டில் உள்ள பெறுமதியான காணிகளை பல்தேசிய நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் பகிர்ந்தளிக்க திட்டமிட்டு வருகின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.