20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு தொடர்பாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கலான நிலைமை காரணமாக அதனை நீக்கி விட்டு, புதிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொஸ்கமை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற கட்சி கூட்டம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் விமல் வீரவங்ச,பிரதமர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார்.
அந்த கூட்டத்தில் தற்போது வழங்கப்பட்டுள்ள வரைவில் காணப்படும் சில பிரச்சினைகள் பற்றி நானும் கட்சித் தலைவர்கள் சிலரும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் நீதியமைச்சருடன் கலந்துரையாட நாங்கள் தீர்மானித்தாலும் அது முடியாமல் போனது.
இதனையடுத்தே குழுவொன்றை நியமிக்கவும் அந்த குழுவின் பரிந்துரை கிடைக்கும் வரை 20வது திருத்தச் சட்டம் தொடர்பான தற்போது வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தாலை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதில்லை எனவும், குழு முன்வைக்கும் பரிந்துரைகளை ஆராய்ந்து புதிய வர்த்தமானி அறிவித்தலை 20வது திருத்தச் சட்டமாக வெளியிட்டு அதனை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வருவது எனவும் பிரதமர் தீர்மானித்தார்.
கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.