20வது திருத்தச்சட்டம் மகிந்தவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்
255Shares

20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் என்பது மகிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து, அவரை எவ்வித அதிகாரமும் இல்லாத நபராக மாற்ற வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே மரிக்கார் இதனை கூறியுள்ளார்.

மகிந்த ராஜபக்சவை அதிகாரமற்ற நபராக மாற்ற வேண்டும் என்ற சதித்திட்டம் காரணமாகவே 20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவுக்காக பொறுப்பை ஏற்க எவரும் முன்வரவில்லை.

20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்ட வரைவு தற்போது உரிமையாளர் இல்லாத வரைவுச் சட்டமாக மாறியுள்ளது.

20வது திருத்தச் சட்ட வரைவை தான் அமைச்சரவையில் சமர்பித்ததை மட்டுமே செய்ததாக நீதியமைச்சர் அலி சப்றி கூறுகிறார். ஆனால், இந்த திருத்தச் சட்டத்தை உருவாக்கியது யார் என்பதை அவர் கூறவில்லை.

உண்மையில் இது மகிந்த ராஜபக்சவை இலக்கு வைத்து, அவரை அதிகாரமற்ற வெறும் அலுவலக உதவியாளர் போன்று மாற்றுவதற்காக வேண்டும் என்றே செய்த சதித்திட்டம் என்பது பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களுக்கு தற்போது புரிந்திருக்கும்.

கொஞ்சம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருங்கள் என நாங்கள் நாமல் ராஜபக்ச மற்றும் மீதமுள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

நாட்டுக்கும் மக்களுக்கும் பொருத்தமான அரசியலமைப்புச் சட்டமே தேவை. இதனை விடுத்து தனி நபர்களை வலுப்படுத்தவும் நபர்களை தரம் தாழ்த்தவும் அரசியலமைப்புத் திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்படக் கூடாது.

மகிந்த ராஜபக்சவை தரம் தாழ்த்தி விட்டு எதனை பெற்றுக்கொள்ள போகிறார்கள் என்பது எமக்கு புரியவில்லை எனவும் மரிக்கார் குறிப்பிட்டுள்ளார்.