20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நாட்டை அபிவிருத்தி செய்ய முழுமையான புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பொல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாரதிபதி கலாநிதி உடுகம்பொல ஹேமரதன தேரரை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நாட்டுக்கு முழுமையான புதிய அரசியலமைப்புச் சட்டம் அவசியம். விடயங்களை ஆழமாக ஆராய்ந்து புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை பாடசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகள், பாடநெறிகளை நவீனமயப்படுத்தல், அறநெறி கல்வி உட்பட கல்வித்துறையில் முன்னேற்றங்களை கண்டறிந்து, குறைகளை போக்குவதற்கான திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக மனித வள அபிவிருத்திக்கு தேவையான 5 நிறுவனங்களை ஒருங்கிணைந்து ஒரு அமைச்சின் கீழ் கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.