அரசாங்கமும், இ.தொ.காவும் பதில் கூற வேண்டும்! மனோ கணேசன்

Report Print Murali Murali in அரசியல்
125Shares

அரசியலமைப்பு குழுவில் மலையக பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பிலும், நஷ்டமடையும் தோட்டங்கள், சிறுதோட்டடங்களாக மறுசீரமைப்பு செய்யப்படுவது தொடர்பாகவும் நாம் எழுப்பியுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கமும், அரசுக்கு உள்ள இருக்கும் இதொகாவும் பதில் குறை வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில், மலையக தமிழ் மக்கள் தொடர்பில், கடந்த இரு வாரங்களுக்குள், இரண்டு முக்கிய கோரிக்கைகளை நான் தேசிய அரங்கில் முன் வைத்துள்ளேன்.

முதலாவது, அரசியலமைப்பு குழுவில், ஏனைய சகோதர இன பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதை போன்று, மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும்;

இரண்டாவது, பெருந்தோட்டங்களை, சிறு தோட்ட முறைமைக்குள் கொண்டு வந்து காணிகள் பிரித்து வழங்கப்படும் உத்தேச திட்டத்தில், தோட்ட தொழிலாளர்களையும் பங்காளிகளாக்கி அவர்களுக்கும் காணிகள் வழங்க வேண்டும்;

இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பிலும் இதொகா மெளனமாக இருக்கின்றது. அரசாங்கத்துக்குள் இருக்கும் மலையக கட்சியான இதொகா, இதுபற்றி தமக்கு எதுவுமே தெரியாதது போல், கள்ள மெளனம் காக்கிறது.

இவை பற்றி இவர்கள் ஜனாதிபதி, பிரதமருடன் இதுவரை பேசியதாக தெரியவில்லை. இவை பற்றி நடைபெற்றுள்ள உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் இதொகா பிரதிநிதிகளுக்கு கலந்துக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படக்கூட இல்லை.

மலையக மக்களின் இருப்பு சம்பந்தமான இந்த அடிப்படை பிரச்சினைகள் பற்றி இதொகா பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும், பேசுவதில்லை. வெளியேயும் பேசுவதில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே, தோட்டத்தொழிலாளருக்கு உறுதியளித்து, இந்த வருடம் ஜனவரி முதல் வழங்குவதாக சொன்ன ஆயிரம் ரூபா நாட்சம்பளம் போன்று இவையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

விரைவில் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டு சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஒழிய போகிறது. அப்போதும் இதொகா, அரசுக்கு உள்ளே பேசாமடந்தைகளாக இருக்கப்போகின்றதாத் என கேட்க விரும்புகின்றேன்

இது தொடர்பில், மலையக அரசியல் சமூக இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக ஊடக போராளிகள், மலையக பிராந்திய மற்றும் தேசிய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச மலையக அமைப்புகள் ஆகியவை மத்தியில், தேசிய, சர்வதேச மட்டங்களில் கருத்து பரிமாற்றம் நடைபெற வேண்டும். அதற்கு நாம் ஆவன செய்வோம்.