20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உருவாக்கியது யார்? திஸ்ஸ அத்தநாயக்க கூறும் விடயம்

Report Print Steephen Steephen in அரசியல்

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை உருவாக்கியது யார் என்பது ஆளும் கட்சியில் உள்ள எவருக்கும் தெரியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்பதால் அது வானத்தில் இருந்து வந்த ஆவணமாக மாறியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை இப்படியா உருவாக்குவது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில்,

20ஆவது திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது யார்?. தற்போதுள்ள பிரச்சினை அதுதான். அமைச்சரவையில் தானே அதனை தாக்கல் செய்ததாக நீதியமைச்சர் கூறுகிறார்.

20ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கியது யார் என்பது தனக்கு தெரியாது என நீதியமைச்சர் அலி சப்றி கூறுகிறார்.

அப்படியானால் தெரியாத ஆவணம் ஒன்றையே அமைச்சரவையில் தாக்கல் செய்துள்ளனர். 20ஆவது திருத்தச் சட்டத்தின் தந்தையை தேடிக்கொள்ள முடியவில்லை என விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அப்படியானால் யார் 20ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கியது?. 20ஆவது திருத்தச் சட்டம் தந்தை இல்லாத பிள்ளை போன்றது.

எப்படி அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை திருத்த போகிறனர். மக்களின் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தவில்லை. கருத்துக்களை பெறவில்லை.

அதேபோல் தமது நாடாளுமன்ற அணியினருக்கு தெரியவில்லை. நீதியமைச்சருக்கு தெரியாது, பிரதமருக்கும் தெரியாது எனவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.