உங்கள் கட்சியின் பழைய வரலாறு மறந்தீர்களா...? திலீபன் எம்.பிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Report Print Theesan in அரசியல்

வவுனியா - ஆச்சிபுரம் கிராமத்தில் நாடாளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான கு. திலீபன் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவித்த கருத்துக்கு எதிராக இன்று ஆச்சிபுரம் கிராமத்தில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஆச்சிபுரம் கிராமத்தினை சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், வயோதிபர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்ததுடன், பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தமது கிராமம் போதைப்பொருள் பாவனை உள்ள கிராமம் என தெரிவித்தமையை கண்டித்து கோசங்களை எழுப்பியிருந்தனர்.

இதேவேளை, ஏழை எங்களை இழிவாக்காதீர்கள். மக்கள் பிரதிநிதிகளே மன்னிப்பு கேள்? மன்னிப்பு கேள்? ஆச்சிபுரம் மக்களிடம் மன்னிப்பு கேள்? வாக்களித்தது எம்மை கேவலப்படுத்தவா..? உங்கள் அரசியலுக்கு எங்கள் கிராமம் என்ன பகடைக்காயா..? உங்கள் கட்சியின் பழைய வரலாறு மறந்தீர்களா? போன்ற பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆச்சிபுரம் கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்ற குறித்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரத்தினையும் கடந்து இடம்பெற்றதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் தமது கிராம மக்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்திருந்தனர்.