ருவான் விஜேவர்தனவின் அழைப்பை ஏற்றுக்கொள்ள தயார்! திஸ்ஸ அத்தநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒத்துழைப்புடன் செயற்பட தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன வெளியிட்டுள்ள கருத்தை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ருவான் விஜேவர்தனவின் இந்த கருத்து ஊடகங்களில் வெளியாகியதே அன்றி உத்தியோகபூர்வமாக கிடைத்த அழைப்பு அல்ல என்பதால் அது பிரதித் தலைவரின் கருத்தா அல்லது கட்சியின் கருத்தா என்பதில் தெளிவில்லை எனவும் அத்தநாயக்க குறிப்பட்டுள்ளார் என குறிப்பிட்டு சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இணக்கத்துடன் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி இந்த அழைப்பை விடுக்குமாயின் அது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என அந்த கட்சியினர் கடந்த பொதுத் தேர்தலில் கட்சியின் தலைமைத்துவத்திற்கு செய்தியை வழங்கியுள்ளனர்.

அந்த செய்தியை புரிந்துக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக்கு முடியாமல் போயுள்ளது.

எனினும் புதிய பிரதித் தலைவரின் கருத்தை நட்புறவான கருத்தாக கருத்தி சிறந்த பதிலை வழங்க தயாராக இருப்பதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.