அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்க தயாராகும் தமிழ் அரசியல் கட்சிகள்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கத்திற்கு எதிராக மிகப்பெரிய எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பிக்க வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்று யாழ்ப்பாணம் இளம் கலைஞர்கள் மண்டபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தின் தற்போதை அரசியல் நிலைமைகள், தியாக தீபம் திலீபனின் நினைவு தினம் சம்பந்தமாக நீதிமன்றம் வழங்கிய தடை தொடர்பாக பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

எதிர்ப்பு போராட்டம் சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கவும் அதனை எப்படி ஏற்பாடு செய்வது என்பது குறித்து எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் கூடிய இறுதி தீர்மானத்தை எடுப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த மற்றும் கடந்த நவம்பரில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பொது தீர்மானத்தை எடுக்க கூடியமை இதுவே முதல் முறையாகும்.

இந்த பேச்சுவார்த்தையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ. சரவணபவன், வட மாகாண சபையின் முன்னாள் பேரவை தலைவர் சீ.வி.சிவஞானம், யாழ். மாநகர சபையின் பிரதி மேயர் ஈசன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் பீ.கஜீபன், வி.கருணாரத்னம், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சீ. வேந்தன் உட்பட பலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.