ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மீது ஜெனிவாவில் இலங்கை கடுமையான எதிர்ப்பு

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கையில் முன்மொழியப்பட்ட 20 ஆவது திருத்தம் குறித்து ஐ. நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் மிச்செய்ல் பெச்லெட்டின் கருத்துக்கள் தேவையற்றவை மற்றும் அனுமானத்தின் அடிப்படையில் முடிவுக்கு முன்னர் அவசரப்பட்டு வெளியிடப்பட்டவை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று செவ்வாயன்று ஜெனீவா - ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வுப் பொது விவாதத்தின் போது இலங்கைக்கான செயல் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என்று உயர் ஸ்தானிகர் கடந்த திங்களன்று கவலை வெளியிட்டிருந்தார்.

எனினும் இலங்கையின் நாடாளுமன்றத்தில் குறித்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு பொதுவிவாதம் மற்றும் திருத்தங்களுக்கு பின்னரே அது நடைமுறைக்கு வரும். எனவே அது குறித்த கவலைகளை இலங்கை மறுப்பதாக தயானி குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த வருடம் பெப்ரவரியில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பான இணை அனுசரணையில் இருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டபோதும் மனித உரிமைகள் பேரவைக்கு உறுதியளித்த விடயங்களில் உறுதியாகவே உள்ளதாக இலங்கையின் பிரதிநிதி தெரிவித்தார்.

இதற்கிடையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கையின் மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன

இந்தநிலையில் மூத்த இராணுவ அதிகாரிகளுக்கு சிவில் பணிகள் வழங்கப்பட்டுள்ளமையை ஆணையாளர் கண்டித்திருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று இலங்கையின் பிரதிநிதி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் இலங்கையின் புதிய அரசாங்கம், பாதுகாப்புக்கு முக்கிய இடத்தை வழங்குகிறது. எனினும் காணாமல் போனோரின் உறவினர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் என்ற ஆணையாளரின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் செயல் வதிவிடப்பிரதிநிதி தயானி மெண்டிஸ் தெரிவித்துள்ளார்