ஐக்கிய தேசியக்கட்சி தனது செல்வாக்கை இழந்து விட்டது: இராதாகிருஷ்ணன்

Report Print Thirumal Thirumal in அரசியல்

தியாக தீபம் திலீபன் உட்பட தியாகிகளை நினைவு கூருவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதே மலையக மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகும் என்று முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் புதிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் விஜயச்சந்திரன் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இராதாகிருஷ்ணன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

மலையக மக்கள் முன்னணி மறுசீரமைக்கப்படும் என தேர்தல் காலத்திலேயே நாம் அறிவித்திருந்தோம். அந்தவகையில் தற்போது மறுசீரமைப்பு பணி ஆரம்பமாகியுள்ளது.

பொதுச்செயலாளர் அ.லோரன்ஸ் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டதையடுத்து, புதிய பொதுச்செயலாளராக விஜயச்சந்திரன் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். நிதிச்செயலாளர் பதவி கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அடுத்தக்கட்ட மாற்றங்கள் இடம்பெறும். எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பரில் கட்சி மாநாட்டை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளோம்.

ஐக்கிய தேசியக்கட்சி இன்று தனது செல்வாக்கை இழந்துவிட்டது. அதற்கு அக்கட்சி தலைவரின் விட்டுக்கொடுப்பின்மையே பிரதான காரணமாகும். தற்போதுகூட தலைவர் பதவியை வைத்துக்கொண்டு பிரதித் தலைவர் பதவியை ருவானுக்கு வழங்கியுள்ளார். இதனால் எதிர்காலத்தில் மேலும் நெருக்கடிகள் அக்கட்சிக்கு ஏற்படலாம்.

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக்கட்சியும் இணைந்தாலும், இணையாவிட்டாலும் எமக்கு பிரச்சினை இல்லை. நாம் எமது மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியாகவே செயற்படுகின்றோம்.

தனது இனத்துக்காகவும், சமுகத்துக்காகவுமே திலீபனை உண்ணாவிரதமிருந்து உயிரை மாய்த்துக் கொண்டார். இருந்தும் அவரை கொச்சைப்படுத்தும் விதத்தில் பாதுகாப்பு செயலாளர் கருத்து வெளியிட்டுள்ளார். திலீபனை நாம் வீரனாகவே கருதுகின்றோம். அவருக்கான நினைவுதினத்தைக்கூட அரசு தடைசெய்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

தியாகிகளுக்கு நினைவேந்தல் நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதேவேளை, அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆளுங்கட்சி சார்பில் பொறுப்புக்கூறுவதற்கு எவரும் இல்லை. அது இன்னும் திருத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

எனவே, பாராளுமன்றத்தில் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே அது குறித்து மேலதிக தகவல்களை வழங்கலாம். எது எப்படியிருந்தாலும் மக்களுக்கு பாதிப்பாக அமையும் எந்தவொரு விடயமாக இருந்தாலும் அதனை நாம் எதிர்ப்போம் என்றார்.