விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதாக இராஜாங்க அமைச்சர் உறுதி..

Report Print Theesan in அரசியல்

சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி என்ற திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும், விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஒன்று வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் முதன்மை அதிதியாக நெல் மற்றும் தானியங்கள், விதை உற்பத்தி, உயர் தொழில்நுட்ப வேளாண்மை இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச கலந்து கொண்டதுடன், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமதிபால, விவசாய திணைக்கள அதிகாரிகள், கமநலசேவை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்தில் விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனைகளான வனவளத்திணைகளத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் காணி விடுவிப்பு தொடர்பாக எடுத்துக்கூறப்பட்டதுடன், உரமானியம், நியாயமான விலையில் விதைகளை பெற்றுக்கொள்ளல், யானைகளால் ஏற்படும் அசௌகரியங்கள், மற்றும் பிரதேச ரீதியாக நெற் களஞ்சியசாலையை பெற்றுக்கொள்ளல் போன்ற விடயங்கள் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது.

இவற்றினை ஆராய்ந்த அமைச்சர் நிரந்தர காடுகள் தவிர்ந்த விவசாயிகளின் காணிகளை வனவளத்திணைக்களம் சுவீகரித்திருந்தால், அதனை விடுவிப்பதற்கு விரைவான நடவடிக்கை எடுப்பதுடன்,ஏனைய பிரச்சனைகள் தொடர்பாகவும் விரைந்து நடவடிக்கையினை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.