கோட்டாபயவின் கையில் அதியுச்ச அதிகாரம் சென்றால் பேராபத்து - ராஜித எச்சரிக்கை

Report Print Rakesh in அரசியல்
229Shares

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அதிகூடிய அதிகாரம், இராணுவப் பின்னணியைக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச போன்ற ஒருவர் கையில் கிடைக்கப் பெற்றால் அது பாரிய நெருக்கடிகளையே தோற்றுவிக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று 20ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கத்தை ஏற்படுத்தும் செயற்திட்டம் இடம்பெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரதமர் மஹிந்த ராஜபக்சவைப் பொறுத்தமட்டில் அவர் பல போராட்டங்களுக்கு மத்தியில் அரசியலில் முன்னேறி வந்தவர். நீண்டகால அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள இவர் மக்கள் தொடர்பில் தெளிவான விளக்கத்தைக் கொண்டு செயற்படுபவர்.

இந்தநிலையில், எவ்வாறு மக்களின் விருப்பத்தை வெற்றிக் கொள்வது? எந்தச் சந்தர்ப்பத்தில் மக்கள் நாட்டின் தலைமைத்துவத்தின் மீது வெறுப்புக்கொள்வார்கள்? போன்ற விடயங்கள் தொடர்பில் அவர் நன்கு அறிந்துகொண்டுள்ளவர்.

அதனால், பிரதமருக்கு இத்தகைய அதியுச்ச அதிகாரங்கள் கிடைக்கப் பெற்றால் , அதில் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படாவிட்டாலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கையில் கிடைக்கப்பெற்றால் அது எவ்வாறான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வார்த்தைகளினால் கூறமுடியாது. அது பாரிய நெருக்கடிகளையே தோற்றுவிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.