ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜயகலா ஆஜர்! ஐந்து மணி நேரம் விசாரணை

Report Print Murali Murali in அரசியல்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று காலை ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

சுன்னாகம் காவல்துறையில் இணைக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஞானலிங்கம் மயூரன் அளித்த புகாரின் அடிப்படையில் இவரை வரவழைக்க ஆணைக்குழு முடிவுசெய்துள்ளது.

கடந்த ஐந்தாம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்த ஞானலிங்கம் மயூரன்,

புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலைசெய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபரான மஹாலிங்கம் சசிகுமார் அல்லது சுவிஸ் குமாரை விடுவிப்பதில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நேரடியாக தலையிட்டதாக கூறியிருந்தார்.

இந்நிலையிலேயே, ஜனாதிபதி ஆணைக்குழுவில் அவர் இன்று காலை ஆஜராகியிருந்ததுடன், அவரிடம் சுமார் 5 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.