இலங்கையில் உள்ள முஸ்லீம் சமூகம், குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் என நியாயமற்ற முறையில் முத்திரை குத்தப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து முஸ்லிம் தலைவர்கள் உட்பட முஸ்லிம் சமூகம் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
எந்தவொரு கட்சிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவானது முன்னோக்கி செல்லும் வழியில் தேவைப்படும் என்பதை அரசாங்கமும் எதிர்க்கட்சியும் உணரத் தவறிவிட்டன.
இலங்கையில் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை செயற்படாதவையாகிவிட்டன.
தற்போது அவை அரசியலில் இருந்து பெரும்பாலும் மறைந்துவிட்டன. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எளிதில் அந்தக்கட்சியை தோற்கடிக்க முடியாது.
நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேருக்கு கட்சியையும் அதன் ஆதரவாளர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை உரிய வகையில் அவர்கள் செயற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் குறித்து கருத்துத் தெரிவித்த ஹக்கீம், அரசியலமைப்பின் 17 மற்றும் 19ஆவது திருத்தங்களை உருவாக்குவதில் தேசத்திற்கு நன்மை பயக்கும் பல்வேறு விடயங்கள் இருந்தமையால் அவற்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்தது.
எனினும் அரசியலமைப்பில் 18 மற்றும் 20ஆவது திருத்தங்களில் காங்கிரஸூக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் கூறியுள்ளார்.