காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படையுங்கள்! கே. மஸ்தான்

Report Print Theesan in அரசியல்
166Shares

நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள போதிலும் அக்காணிக்கான ஆவணம் இல்லாதவர்கள் விரைவாக விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தமது பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், மன்னார் முல்லைத்தீவுக்கான ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

எமது பகுதிகளில் பாரியளவு காணிப்பிரச்சினை இருக்கின்றது. வன இலாகா மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள காணிப்பிரச்சினைகளே அதிகமாகவுள்ளது.

அத்துடன் பல வருடங்களாக இருக்கின்றவர்களுக்கு அந்த காணிக்கான ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றது. இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவே ஜனாதிபதி செழிப்பின் பார்வை என்ற செயற்றிட்டத்தின் ஊடாக மக்கள் வீடுகள் கட்டியிருந்தாலும் சரி, விவசாய காணிகள் மற்றும் தோட்டக்காணிகளானாலும் சரி மக்களின் பாவனையில் நீண்ட காலமாக இருக்கும் பட்சத்தில் அதற்கான ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை இம்மாதம் 30 ஆம் திகதிக்குள் பிரதேச செயலகங்களின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான விண்ணப்ப படிவங்களை எமது அலுவலகத்திலும் பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளதுடன், காணி ஆணையாளர் நாயகத்தினால் சுற்றறிக்கையொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பப்பட்டு அவர் ஊடாக செயற்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்கள் என்ற முறையில் எங்களுக்கும் பாரிய பொறுப்புள்ளதால் மாவட்ட அரசாங்க அதிபர்களை தொடர்பு கொண்டு மிக விரைவாக கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுப்படுத்தி விண்ணப்பங்களை பெறுமாறு தெரிவித்துள்ளேன்.

மக்களும் 30 ஆம் திகதிக்கிடையில் விண்ணப்பங்களை பெற்று நிரப்பி பிரதேச செயலகங்களில் வழங்குமாறும் கோருகின்றேன்.

மக்களுக்கான சேவைகள் விரைவாக சென்றடைந்து தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் எண்ணமாக இருக்கின்றது.

இதேவேளை, கல்வி அமைச்சரை சந்தித்து கல்வி அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆசிரியர் தினத்தை வவுனியாவில் நடத்துமாறு கோரியுள்ளோம்.

அத்துடன் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. கடந்த அரசாங்கத்தாலும் இது தொடர்பான முயற்சி எடுக்கப்பட்டாலும் அது ஏதோ ஒரு காரணத்தால் தாமதமடைந்து செல்கின்றது.

ஏனைய இடங்களில் ஒரே இரவில் பல்கலைக்கழகங்களாக மாற்றமடையும் போது இங்கு மட்டும் ஆவணங்களையே கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனினும் வவுனியா மாவட்டத்திற்கான பல்கலைக்கழகம் மிக விரைவாக வரவேண்டும். அப்போது எமது நகரமும் வளர்ச்சி அடையும்.

வவுனியாவில் நகர திட்டமிடலில் பல நல்ல திட்டங்கள் இருந்தது. குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகத்தினை மாற்றுவது, வைத்தியசாலையை விஸ்தரிப்பது என பல திட்டங்கள் இருந்தபோதிலும் அவற்றை குழப்பும் விதமாக வேறு திட்டங்களை திணித்துள்ளார்கள். எனினும் இவற்றை சீர்செய்து 5 வருடங்களில் நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.